யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விட்டலன் நாமம் மூலம் நமக்கிருக்கும் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் சரியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன.
பரவிய செய்தி
விட்டலன் நாம மகிமை..,,, 9 நிமிடத்தில் உயர்இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தமாக மாறும்... பூனே மருத்துவ ஆராய்ச்சி நிரூபணம்..
விரிவான விளக்கம்
விட்டலன் நாம மகிமையால் 'மாரடைப்பு' சரி ஆகும் என்று கூறி 2:54 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் ஒருவர் "விட்டல, விட்டல" என்றும், "விட்டல் விட்டல்" என்றும் கத்தி பாடுவதைக் காணமுடிகிறது.
பரவி வரும் வீடியோவில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், "இதயத்தில் பிரச்சனை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தலைமுறை தலைமுறையாக அவர்களின் அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது, அல்லது அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை பண்ணியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்தப் பரம்பரையில் உள்ளவர்கள், செய்யவேண்டிய எளிமையான முறை ஒன்றை சொல்லித் தருகிறேன். அதை நீங்கள் கடைபிடித்தால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இதயம் தொடர்பான எந்தப் பிரச்சனைகளும் வராது.
அதற்கு மந்திரம் சொல்ல வேண்டும். “விட்டலா” அல்லது “விட்டல்” என்று சொல்லலாம். இதில் “ட” என்பது வாயின் மேற்பகுதியில் தொடுவதால், அதிலிருந்து செல்லக்கூடிய நரம்பு நேரடியாக இதயத்தின் நடுப்பகுதிக்கு செல்வதால், அங்கு சென்று இதய சக்கரம் அதாவது அனாக சக்கரத்தை தூண்டி விடும். அப்போது இதய சம்பந்தமான அனைத்து நோய்களும் சரி ஆகும், மாரடைப்பு சரி ஆகும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத்தில் ஓட்டை இருந்தால் கூட, அந்த ஓட்டை அடைக்கப்படும். ஏதாவது இதயத்தில் அடைப்பு இருந்தாலும் வெளியேறி விடும்.
இதற்கு ஒரு பெரிய வரலாறே உண்டு. பந்தர்பூரில் ஒரு கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. அங்கே புனேவில் இருந்து மக்கள் நடந்து செல்வார்கள். அப்போது அதில் ஒரு குழுவினர், மருத்துவரை பார்த்தபோது அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. இதய நோய்களும் இருந்தன. அப்போது மருத்துவர் போகக்கூடாது என்று சொல்லியும் அவர்கள் கட்டாயமாக கோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு போய்விட்டு திரும்பி வந்த அவர்களை பரிசோதனை செய்தபோது, எல்லாமே அவர்களுக்கு பழைய நிலைக்கு வந்துவிட்டது. இது ஒரு பெரிய கதை. அந்த மருத்துவமனையின் பெயர் MIMER புனே மருத்துவமனை.
அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்து பார்த்ததில், இப்படி 9 நிமிடம் ‘விட்டல நாமத்தை’ ஜெபித்தால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தமாக மாறுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு மருத்துவ ஆதாரங்களே உள்ளன" என்று அந்த வீடியோவில் ஒருவர் பேசிவிட்டு "விட்டல, விட்டல" என்றும், "விட்டல் விட்டல்" என்றும் கத்தி பாடுகிறார்.
இந்நிலையில் பரவி வரும் வீடியோவை பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
விட்டலன் நாம மகிமை..,,,
— கைப்புள்ள (@kaippulla123) July 16, 2024
9 நிமிடத்தில் ஹைபீபி லோபீபியாக மாறும்... பூனே மருத்துவ ஆராய்ச்சி நிரூபணம்.. pic.twitter.com/0qHimTLyj3
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், இது தொடர்பான வீடியோக்கள் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காணமுடிந்தது.
#iskcon #Sadhguru #SadhguruQuotes #JaiShriRam #JaiShriKrishna #RamMandirAyodhya #MathuraMandir #Mathura #harekrishna #Pandharpur #Gyanvapi #GyanvapiMandir #Gyanvapi #GyanvapiCase Remove Worship Act #FreeHinduTemples #FreeHinduTemple #LordShiva #Krishna #heartattack Maharashtra pic.twitter.com/thACDw7UQt
— Kiran Kumar Pabbathi (@pabbathi_kiran) February 5, 2024
எனவே பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி, "MIMER" என்ற புனே மருத்துவமனையில் இதுதொடர்பாக ஏதாவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்தோம். "Asian Journal of Complementary and Alternative Medicine" என்ற இதழில் இது தொடர்பாக கடந்த 2014 ஏப்ரலில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில், இந்த ஆய்வு புனேவைச் சேர்ந்த பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களால் நடத்தப்பட்டது என்றும், 10 நாட்களுக்குள் 30 ஆரோக்கியமான நபர்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த 30 பேரையும் தினமும் 9 நிமிடம் 'விட்டல், விட்டல்' மந்திரத்தை ஜபிக்க வைத்ததன் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
ஆனால் இந்த ஆய்வில், விட்டலன் நாமம் ஜெபிப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, அந்த 30 நபர்களில் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் இதயத் துடிப்பு போன்ற அளவீடுகள் குறித்து மட்டுமே முடிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த 30 நபர்களின் ஆரம்ப மருத்துவ அளவீடுகளுடன் ஒப்பிடுகையில் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் இதயத் துடிப்புகளில் முன்னேற்றம் காணப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் ஒரு மறுப்பும் (Disclaimer) கூறப்பட்டுள்ளது. அதில், "தற்போதைய விட்டல் ஆய்வு, இதயத்தின் உடலியல் மற்றும் ஆற்றல் சுயவிவரம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது குறித்து ஆராய, எதிர்காலத்தில் ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மட்டுமன்றி, இதய நோயாளிகளிடமும் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனை நடத்தப்படலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், இந்த ஆய்வு இதய நோயாளிகளிடம் நடத்தப்படவில்லை என்பதையும், ஆரோக்கியமான முப்பது தன்னார்வல்களிடம் மட்டுமே நடத்தப்பட்ட மிகச்சிறிய ஆய்வு என்பதையும் உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் இதுகுறித்து வேறு ஏதேனும் ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தேடினோம். கடந்த 2000 ஆம் ஆண்டு மற்றும் கடந்த 2017 ஆம் ஆண்டுகளில், தியானம் செய்வதன் மூலம் இதயத் துடிப்பைக் குறைத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்பது குறித்து ஆய்வுகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் இதில் எங்குமே, மந்திரம் ஜெபிப்பதன் மூலம் மாரடைப்பை தடுக்கலாம் என்பது குறித்து எந்த அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் படிக்க: ஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன் ஸ்ரீருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டதா ?
மேலும் படிக்க: காயத்ரி மந்திரம் சொன்னால் கொரோனா சரியாகுமா ? எய்ம்ஸ் ஆய்வு !
முடிவு:
நம் தேடலில், விட்டலன் நாமத்தை 9 நிமிடங்கள் ஜெபிப்பதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என்று புனே மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
