யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கிறிஸ்தவப்பள்ளிகளில் இந்து மாணவர்களை அடிக்கும் பாதிரியார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
கிறித்தவ மிஷினரி பள்ளிகளில் படிக்கும் இந்து குழந்தைகளை பாதிரியார்கள் நடத்தும் விதம்....அல்லேலூயா.... அந்த ஆண்டவனே உன்னை மன்னிக்கமாட்டார்.
விரிவான விளக்கம்
கிறித்தவ மிஷினரி பள்ளிகளில் படிக்கும் இந்துக் குழந்தைகளை பாதிரியார்கள் நடத்தும் விதம் என்று கூறி 1:04 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், பாதிரியார் ஒருவர் வரிசையாக நிற்கும் குழந்தைகளை ஒவ்வொருவராக அழைத்து, தலைமுடியை பிடித்து, தள்ளிவிடுவதையும், அருகில் குழந்தைகளின் பெற்றோர்கள் இருப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.
*கிறித்தவ மிஷினரி பள்ளிகளில் படிக்கும் "இந்து" குழந்தைகளை பாதிரியார்கள் நடத்தும் விதத்தை பாருங்கள் மக்களே.... 😇😇*
— nagaraj nagaraj BJP (@nagaraj19651298) July 24, 2024
*அடேய் பாதிரி உன்னை அந்த ஏசு கூட மன்னிக்கமாட்டார்டா. 😥😥😥😭😭* pic.twitter.com/xkQr7FATVw
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்தே இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
Ceremony shows priest hitting kids. How would you react? pic.twitter.com/RngRYisVzZ
— Dax Gigandet (@DaxGigandet) January 31, 2019
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘dailymail.co.uk’ ஊடகப் பக்கத்தில், பரவி வரும் வீடியோ குறித்து கடந்த 2016ஆம் ஆண்டே “பலிபீடத்தில் வரிசையில் நிற்கும்போது குழந்தைகளின் தலைமுடியை இழுத்து 'அவர்களை ஆசீர்வதிக்கும்' வினோதமான பாதிரியார்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், குழந்தைகள் பிரேசிலிய தேவாலயத்தில் தங்கள் First Communion வழிபாட்டுக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது, பாதிரியார் ஒருவர் அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறான ஆசீர்வாதத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

இதேபோன்று கத்தோலிக்க தேவாலயங்கள் குறித்த செய்திகள் வெளியிடும், “bishop-accountability.org” பக்கத்திலும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதிலும் பிரேசிலில் உள்ள தேவாலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

ஆனால் பிரேசிலில் உள்ள எந்த தேவாலயம் என்பது குறித்தோ, வீடியோவில் உள்ள பாதிரியாரின் பெயர் குறித்தோ எதிலும் செய்திகள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்து மாணவர்களை பாதிரியார் தாக்குவதாகப் பரவும் செய்திகளும் அதிகாரப்பூர்வமற்றவை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளில், பிரேசிலில் உள்ள தேவாலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்த மாணவர்கள் என்றுதான் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.
முடிவு:
நம் தேடலில், கிறித்தவ மிஷினரி பள்ளிகளில் படிக்கும் இந்துக் குழந்தைகளை பாதிரியார் தாக்குவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
