யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“குர்கான்-ஃபரிதாபாத் சாலையில், 25 வயதுமிக்க பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார்” எனப் பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல. பிரேசிலில் நடைபெற்ற சம்பவத்தை இந்தியாவில் நடைபெற்றது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்
பரவிய செய்தி
இந்தியாவின் குர்கான்-ஃபரிதாபாத் சாலையில், 25 வயதுப் பெண் ஒருவர் 3 மணி நேரம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், ஓடும் காரிலிருந்து நடைபாதையில் தூக்கி வீசப்படுவதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன
சீ.. இந்த நாட்டுல பொறுக்கிகள் அதிகரித்து விட்டார்கள் கார் தெரிந்து விட்டதால் அவர்களைப் பிடிப்பதும் சுலபம்தான். ஆனால் என்ன செய்யப் போகிறார்களோ? மாட்டுபவர்கள் உண்மையான குற்றவாளிகளோ இல்லையோ தெரியவில்லை/
இந்த நாட்டில் இது ஒரு எழவு.!
குற்றவாளிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம் பெண்கள் பாதுகாப்பு சமூகத்தின் பொறுப்பு! இரண்டு கால்களும் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

விரிவான விளக்கம்
"ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள குர்கான்-ஃபரிதாபாத் சாலையில் 25 வயதுமிக்க பெண் ஒருவர் மூன்று மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட காட்சி" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பெண் ஒருவர் காரில் இருந்து தூக்கி வீசப்படுவதையும், சுவற்றில் பயங்கரமாக மோதுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது இந்தியாவில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
கடந்த மார்ச் 30 அன்று பரவி வரும் வீடியோ குறித்து “Diariodoamapa“ பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பிரேசில் நாட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த வழக்கை விசாரித்த காவல்துறைத் தலைவர் மனோல் பச்சேகோ, இந்த சம்பவம் ஒரு தற்கொலை முயற்சி என்று கூறியுள்ளார்.
""காரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரும் அவரது மனைவியும் என மொத்தம் நான்கு பேர் இருந்தனர். தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண் குதிப்பதாகக் கூற, அந்த ஆணும் கீழே வீசியுள்ளார்" என்று சாட்சியங்கள் கூறியுள்ளனர். அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் அவசர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்" என்றும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, “Notícias do Amapá “ என்ற ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, பிரேசிலில், குடும்ப தகராறு காரணமாக காரில் இருந்து இளம்பெண் ஒருவர், அவரது குடும்பத்தினரால் கீழே தூக்கி வீசப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
முடிவு:
நம் தேடலில், “இந்தியாவின் குர்கான்-ஃபரிதாபாத் சாலையில், 25 வயது பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார்” எனப் பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல. பிரேசிலில் நடைபெற்ற சம்பவத்தை இந்தியாவில் நடைபெற்றது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.