யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து 3.1.2026 அன்று புகார் வந்ததையடுத்து, காவல்துறையினர் உடனடியாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பரவிய செய்தி
சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்து, சுவாமிக்கு வைத்திருந்த அபிஷேகப் பாலை தன்மீது ஊற்றிக்கொண்டு, "கடவுள் இல்லை" என கூச்சலிட்டு தீட்சிதர்களைத் தாக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது!

விரிவான விளக்கம்
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் கருவறையில் அத்துமீறி நுழைந்த, அடையாளம் தெரியாத இளைஞர் திடீரென அங்கு இருந்த அபிஷேகத்துக்கு வைத்திருந்த பால், தண்ணீர் குடங்களை எடுத்து தனது தலையில் ஊற்றிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதைத் தடுக்க முயன்ற செல்வகணேஷ் தீட்சிதர் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோரை அந்த இளைஞர் பலகையால் தலையில் தாக்கினார்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் கருவறையில் அத்துமீறி நுழைந்து, தீட்சிதர்களிடம் தகராறு செய்த சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறையையும் குற்றம்சாட்டி தமிழக பாஜக இளைஞர் அணித் தலைவர் எஸ்.ஜி.சூர்யா, பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் சென்று சுவாமி முன்பு உள்ள கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றிக் கொண்டு நான் தான் கடவுள் என பேசி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
பக்தர்களை கேவலமாகப் பேசி… pic.twitter.com/beqoYZKT8v
கிறிஸ்தவத்தையும், இஸ்லாமியத்தையும் போற்றி மதிக்கும் இந்த திமுக அரசு ஏன் எங்களின் நம்பிக்கையை சிதைக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கருவறைக்கு (திகவை)! சார்ந்தவன் அத்துமீறி நடப்பது ஏற்புடையதா?
இதை எல்லாம் பார்க்கும்பொழுது
நெஞ்சம் விம்மி வெடிக்கிறது#DMKFailsTN pic.twitter.com/NuGnzLKVFR
உண்மை என்ன?
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் கருவறையில் புகுந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தேடினோம். அப்போது கடலூர் மாவட்ட காவல்துறை, ஜனவரி 05, 2026 அன்று வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது.
— Cuddalore District Police (@cudpoliceoffi) January 5, 2026
அதில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து 3.1.2026 அன்று புகார் வந்ததையடுத்து, காவல்துறையினர் உடனடியாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். கருவறைக்குள் நுழைந்தவரின் பெயர் மணிகண்டன், வயது 35, அவர் மனநலம் (Mental illness 85% as per medical certificate) பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவர் உறவினரிடன் ஒப்படைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் செயல்படுகிறது என்பதை தேடினோம். அப்போது BBC Tamil ஊடகத்தில், ஜூன் 01, 2022 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்து, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு தெரிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் The Indian Express, Times Of India போன்ற ஊடகங்களில் வெளியான செய்திகளிலும், சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கீழ் இல்லை என்பதும், தீட்சிதர்களாலேயே (Podu Dikshitars) சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, தகராறு செய்த சம்பவத்தில் ஜனவரி 03 அன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மறைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். மேலும் சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கீழ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீட்சிதர்களாலேயே (Podu Dikshitars) சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.