யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மோடி ஆட்சியின் போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டது, கைது செய்யப்பட்டது, தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.
பரவிய செய்தி
பாஜகவின் 11 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை"
- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
#NainarNagendran #BJP #TTVDhinakaran #OPS #ADMK #TNPolitics

விரிவான விளக்கம்
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அதிமுக இடம்பெற்றிருந்தது. அதில், டிடிவி தினகரனின் அமமுக-வும் இடம்பெற்றிருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்தப் பின்னணியில், சமீபத்தில் கூட்டணி குறித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "அதிமுக உட்கட்சி பிரச்னைக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது NDA கூட்டணிக்கு வந்தால் ஓபிஎஸ், டிடிவி.தினகரனை சேர்த்துக் கொள்வோம்” என்றும் ”பாஜகவின் 11 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை" என்று தெரிவித்துள்ளதை தந்தி டிவி செய்தியாக வெளியிட்டதுள்ளது.
"கூட்டணிக்கு ஓபிஎஸ், டிடிவி வந்தால் சேர்த்துக்கொள்வோம்"
"அதிமுக உட்கட்சி பிரச்னைக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது
என்டிஏ கூட்டணிக்கு வந்தால் ஓபிஎஸ், டிடிவி.தினகரனை சேர்த்துக் கொள்வோம்
பாஜகவின் 11 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை"
- பாஜக… pic.twitter.com/yWzDkQIJh9
உண்மை என்ன?
இலங்கைக் கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், கைது செய்யப்படுவதும் நடந்து வருகிறது. சில நேரங்களில் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் உண்டு. மோடி தலைமையிலான பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம்.
இது தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத்தின் மேல் அவையில் ’தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களின் வலைகள், படகுகள் சட்ட விரோதமாக பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் மீனவர்கள் கொல்லப்பட்டது’ குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்த பதிலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணமுடிந்தது.

அதில் ‘ஜனவரி 18, 2021 அன்று இலங்கை கடற்படையின் கப்பல் தமிழ்நாடு மீனவர்களின் படகில் மோதியதால், நான்கு மீனவர்கள் உயிரிழந்தார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தேடியதில், ‘The NEWS Minute’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், ’இந்த நான்கு மீனவர்களும் இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதற்காக இலங்கை கடற்படையால் அடித்து கொல்லப்பட்டதாக’ இந்த மீனவர்களின் கிராமத்தினர் குற்றம் சாட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடியதில், ’The Indian EXPRESS’ செய்தியின் படி, கடந்த 2017ஆம் ஆண்டி மார்ச் மாதம் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை சுட்டதாகவும் அதில் பிரிட்கோ என்ற மீனவர் கொல்லப்பட்டதாகவும் மற்ற மூன்று பேர் காயமடைந்ததாகவும்’ தெரியவருகிறது.

இதேபால் ’THE ECONOMIC TIMES’-ல் வெளியான செய்தி, ’2025 ஜனவரி மாதம் இலங்கை கடற்படை சுட்டதில் இரண்டு மீனவர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஜப்னா மருத்துவமனையில் இருப்பதாகவும்’ குறிப்பிடுகிறது.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்படுவது மட்டுமல்ல, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடுகள் நடத்துவதால் மீனவர்கள் காயமடைந்து பணிக்கு செல்லமுடியாமல் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்களை கைது செய்து படகுகள், வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, 2020ஆம் ஆண்டு 74 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2024ஆம் ஆண்டில் 528 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 5 ஆண்டுகளில் கைது எண்ணிக்கை 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் மட்டுமே 53 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், 2021ல் 5 மீனவர்களும் 2024ல் 2 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகமே தகவல் அளித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், அடையாளம் தெரியாத இலங்கை நபர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் 2024 டிசம்பரில் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து, மோடி ஆட்சியின் போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன என்பது தெளிவாகிறது.
முடிவு:
மோடி ஆட்சியின் போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டது, கைது செய்யப்பட்டது, தாக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளதை மறைத்து, மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பொய்யான தகவலை கூறுகிறார்.