யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மதரஸா ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி 2015-ல் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
பரவிய செய்தி
பிகார் மாநிலத்தில் போலீசார் உடன் மோதிய இஸ்லாமிய போராட்டக்காரர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்பட்டது.

விரிவான விளக்கம்
பீகார் மாநிலத்தில் இஸ்லாமியப் போராட்டக்காரர்கள் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் அதனால் அவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ பற்றி 2015, ஆகஸ்ட் மாதம் ‘India.com’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. வீடியோவில் காவல் துறையினர் முஸ்லீம் ஒருவரை அடிக்கும் காட்சி இந்த கட்டுரையிலும் புகைப்படமாக இடம்பெற்றுள்ளது. இது குறித்து Times Of India, ANI ஆகிய ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
ClaimIndia.com
பீகார் மாநில அரசு மதரஸா ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி மதரஸா ஆசிரியர் சங்கம் சார்பில் 2015, ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. கர்தானிபாக் (Gardanibagh) ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் முதலமைச்சரின் வீட்டிற்கு செல்ல முயன்றதாகக் கூறி அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
அந்த தடியடியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நிகழ்ந்த சம்பவம் போல் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
இந்த பொய் செய்தியைப் பரப்பிய ஜானி பாய் (@Johni_raja) என்ற எக்ஸ் பக்கம் இதற்கு முன்னர் பல பொய் செய்திகளைப் பரப்பியுள்ளது. அவை குறித்தும் யூடர்ன் தளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம் (1, 2, 3).
மேலும் படிக்க: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மது வழங்கப்படுவதாகப் பரப்பப்படும் பொய்!
முடிவு:
பீகார் மாநில அரசு மதரஸா ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி மதரஸா ஆசிரியர் சங்கம் 2015ம் ஆண்டு போராட்டம் நடத்தியது. அப்போது காவல் துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது. இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நிகழ்ந்தது போல் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.