யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த திருட்டு சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பரவிய செய்தி
ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு. இனிமேல் நிம்மதியாக வீட்டு விழாக்களில் கூட பங்கு கொள்ள இயலாது போல ! திராவிட ஆட்சிடா

விரிவான விளக்கம்
வீட்டு விழாவில் கலந்து கொண்டு ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் இருந்து நகை பறிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாகப் அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய திருட்டு சம்பவத்தின் முழுமையான வீடியோ ‘கன்யா கன்னடத்தி’ (kanya.kannadathi) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 14-ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த அப்பதிவை மொழி பெயர்த்ததில், ஜன்னலுக்கு அருகில் அமர்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள் எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதை அறிய முடிந்தது.

மேலும் அந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு போர்டில் கன்னடா எழுத்துக்கள் இருப்பதையும் காண முடிகிறது. ‘India Today’ தளத்தில் இந்த சம்பவம் பற்றி கடந்த 15-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் சங்கர் நகர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த 10-ம் தேதி பெண்கள் சிலர் பூஜையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜன்னலின் அருகே அமர்ந்திருந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது. பூஜையை வீடியோ எடுக்கும் போது இந்த திருட்டு சம்பவமும் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவின் சிறு பகுதியைத்தான் தமிழ்நாட்டில் நடந்த திருட்டு சம்பவம் எனப் பரப்புகின்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை ஆய்வு செய்து வருகிறது. இதனை ‘Mirror Now’ ஊடகமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இவற்றிலிருந்து கர்நாடகாவில் நடந்த திருட்டு சம்பவத்தைத் தமிழ்நாட்டில் நடந்ததாகப் பொய் செய்தி பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் நடந்த திருட்டு சம்பவம் எனப் பரவக் கூடிய வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடந்த திருட்டு சம்பவம்.