யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஹைதராபாத் சஞ்சீவியா பூங்காவில் பிரம்மாண்டமான தேசியக்கொடியை ஏற்றும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
வாகா எல்லையில் 3.5 கோடி ரூபாய் செலவில் 55டன் எடையுள்ள 360 அடி உயரம் கொண்ட தேசியக் கொடி கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்தியர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்ஜெய் ஹிந்த்!

விரிவான விளக்கம்
மிகப் பிரம்மாண்டமான தேசியக் கொடியினை ஏற்றும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, அதன் நீளம், அகலம், அதற்கான செலவுகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்த கொடி வாஹா எல்லையில் நிறுவப்பட்டுள்ளது என்று தகவல் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Just Hyderabadi Things’ என்ற பேஸ்புக் பக்கத்தில், ”இந்தியாவின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய கொடி, ஹைதராபாத்தில் உள்ள சஞ்சீவியா பூங்காவில்” என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டோம். இந்த இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இவையிரண்டும் பிரம்மாண்டமான தேசியக்கொடியை ஏற்றும் ஒரே நிகழ்வின் போது வெவ்வேறு கோணத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

பிரம்மாண்டமான தேசியக்கொடிக்கான கம்பம் அமைக்கும் பணியைப் பற்றிய ’The Hindu’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியைக் கொண்டு பார்க்கையில், இந்த நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள சஞ்சீவியா பூங்காவில் நடைபெற்றது என்பது உறுதியாகிறது. இந்த கொடிக் கம்பத்தின் உயரம் 291 அடியாகும். கொடியின் அளவு 108x72 அடியாகும்.

ஆனால் இந்தியாவிலே மிகப்பெரிய கொடிக் கம்பம் என்ற பெருமையை ஓராண்டிற்குக் கூட தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், அதற்குள்ளாகவே, 120x80 அடி அளவிலான கொடியை 360 அடி உயரமுள்ள கம்பத்தில் பறக்கவிட்டு பஞ்சாப் அரசாங்கம் அந்த பெருமையை எடுத்துக்கொண்டது. இந்த மிகப்பெரிய தேசியக்கொடி பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ’அட்டாரி’ என்னுமிடத்தில் உள்ளது. இந்த அட்டாரி இந்திய எல்லைப்புற கிராமமாகும். அதே போல் வாஹா என்பது பாகிஸ்தான் எல்லைப்புற கிராமமாகும். இதனாலே, இந்த இடத்தை ’அட்டாரி-வாஹா’ எல்லை என்று அழைக்கிறார்கள். ஆனால் பஞ்சாப் அரசாங்கம் இந்த மிகப்பெரிய தேசியக்கொடியை அட்டாரியில்தான் நிறுவியுள்ளது.
இதிலிருந்து, வாஹா எல்லைக்கு அருகில் உள்ள அட்டாரி என்னுமிடத்தில் இந்தியாவிலே மிகப்பெரிய தேசியக்கொடி மிக உயர்ந்த கம்பத்தில் நிறுவப்பட்டுள்ளதாகப் பதிவிடப்பட்ட தகவல் உண்மையாக இருந்தாலும், அதனுடன் பரப்பப்படும் வீடியோ ஹைதராபாத் சஞ்சீவியா பூங்காவில் பிரம்மாண்டமான தேசியக்கொடியை ஏற்றும் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
எனவே, இந்த வீடியோ வாஹா எல்லைக்கு அருகில் மிகப்பெரிய தேசியக்கொடியை ஏற்றும்போது எடுக்கப்பட்டது என்று பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
முடிவு:
பரப்பப்படும் இந்த வீடியோ ஹைதராபாத்தில் உள்ள சஞ்சீவியா பூங்காவில் பிரம்மாண்டமான தேசியக்கொடி ஏற்றும் போது எடுக்கப்பட்டதாகும். இதனை வாஹா எல்லையிலுள்ள மிகப்பெரிய தேசியக்கொடியுடன் இணைத்துப் பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.