யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மெட்ரோ திட்டத்திற்கான ரூ.63,246 கோடி நிதி பங்களிப்பை, ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் (Bilateral and Multilateral loans) பங்கீட்டு கொள்கின்றன. அஸ்வத்தாமன் கூறும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
மெட்ரோவுக்கு ரூ.63,246 கோடியை, பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொண்டார். இது மாநில அரசின் திட்டம், ஆனால் இதற்கு மத்திய அரசு தான் நிதி வழங்கியுள்ளது - அஸ்வத்தாமன்
விரிவான விளக்கம்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்காக 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘ஆதன் நியூஸ்’ யூடியூப் பக்கத்தில் வழங்கிய பேட்டியில் “மெட்ரோவுக்கு ரூ.63,246 கோடியை, பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொண்டார். இது மாநில அரசின் திட்டம், ஆனால் இதற்கு மத்திய அரசு தான் நிதி வழங்கியுள்ளது” என்று கூறி பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் வீடியோவில் பேசியிருப்பதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் அஸ்வத்தாமன் கூறியுள்ள கருத்துகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்காக 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான நிதி பங்களிப்பை, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசிடம் இருந்து பெறப்படும் நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் (Bilateral and Multilateral loans) மூலம் பெறப்படுகின்றன என்பதை “The Hindu” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி மூலம் அறிய முடிந்தது.
இதே போன்று, “Metrorail News” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலும், “மெட்ரோ திட்டத்திற்கான ரூ.63,246 கோடி நிதி பங்களிப்பை, ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் (Bilateral and Multilateral loans) பங்கீட்டு கொள்கின்றன” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதுவரை ஒன்றிய அரசு, 2024-25 நிதியாண்டில், ₹5,219.57 கோடியும், 2025-26 நிதியாண்டில், ₹3,000 கோடியும், ஆக மொத்தமாக ₹8,219.57 கோடியும் இந்த திட்டத்திற்காக வழங்கியுள்ளது என்பதை அறிய முடிந்தது.
இதன் மூலம், இந்த திட்டத்திற்கான மொத்த தொகையான ரூ.63,246 கோடியை, பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொண்டார் என்று கூறி பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார் என்பது உறுதியாகிறது.
மேலும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பொதுவாக ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து தான் நிதி அளிக்கின்றன. இதன் உண்மை தன்மை அறியாமல், மாநில அரசின் திட்டத்திற்கு முழு உதவியையும் ஒன்றிய அரசு தான் செய்துள்ளது என்று கூறி வருகிறார் அஸ்வத்தாமன்.
முடிவு:
நம் தேடலில், மெட்ரோ திட்டத்திற்கு ரூ.63,246 கோடியை ஒன்றிய அரசே வழங்கிவிட்டது என அஸ்வத்தாமன் பரப்பும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.