யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ரூ.24.65 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை ரூ.5000 கோடியில் கட்டப்பட்டதாகப் பொய்யான தகவலைக் கூறுகிறார்.
பரவிய செய்தி
தரமணியில் ரூ.5000 கோடி செலவில் தமிழ்மொழிக்கு செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைத்து கொடுத்தது பிரதமர் திரு
@narendramodi அவர்கள் தான்..!

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் தற்போது இந்தித் திணிப்பிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ‘ஆதன் News’ யூட்யூப் சேனலுக்கு பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பேட்டியளித்தபோது, ’தமிழை வளர்ப்பதாகச் சொல்லும் திமுக, செம்மொழி ஆய்வு நிறுவனத்தை வெறும் வாடகை கட்டிடத்தில் அமைத்தது. ஆனால் பிரதமர் மோடி சென்னை தரமணியில் ரூ.5000 கோடி செலவில் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கான கட்டிடம் அமைத்துக் கொடுத்தார்’ என்று பேசினார்.
பேட்டியின் இந்த சிறு பகுதி மட்டும் ’என் மண் என் மக்கள்’ என்ற சமூக வலைத்தளப் பக்கங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
செம்மொழி ஆய்வு நிறுவனம் குறித்து இணையத்தில் தேடிய போது ’OneIndia’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காண முடிந்தது.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பெயர்ப்பலகை இந்தியில் அமைக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தது பற்றிய இந்த செய்திக் கட்டுரையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சுருக்கமான வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2004 அக்டோபர் மாதம் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை எற்று இதனைச் செய்தது.
இதனைத் தொடர்ந்து ’செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்’ என்ற அமைப்பு 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தின் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்டது.
அந்த அமைப்பிற்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு ’செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. 2008ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுக்கான கட்டிடங்களில் இயங்கி வந்த இந்த நிறுவனத்திற்காக ரூ.24.65 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை சென்னைப் பெரும்பாக்கத்தில் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அதுவரை இந்த நிறுவனத்தின் பெயர்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இருந்தது. ஆனால், பெரும்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு பெயர்ப்பலகையில் இந்தி திணிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ.2,869 கோடி ஒதுக்கியுள்ள போது, தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
மேற்கண்ட தகவல்களை வைத்துப் பார்க்கும்போது செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு 5000 கோடி செலவு செய்யப்பட்டதாக அஸ்வத்தாமன் குறிப்பிடுவது உண்மைக்குப் புறம்பான தகவலாகும்.
முடிவு:
24.65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு, 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தவறான தகவலைக் கூறுகிறார் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்.