யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
19ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பள்ளிகள் நிறுவப்பட்டதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும். 13ஆம் நூற்றாண்டிலே ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் இங்கிலாந்தில் செயல்ப்பட்டு வருகின்றன.
பரவிய செய்தி
தமிழர்களின் குருகுலக்கல்வியை தடுத்து அழித்து ஆங்கில கல்வியை திணித்தது கிறிஸ்தவ ஆங்கிலேய அரசு - அர்ஜீன் சம்பத்.

விரிவான விளக்கம்
"இங்கிலாந்தில் முதன்முதலில் 1811 ஆண்டில் தான் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 'குருகுலக் கல்வி’ என்ற முறையில் இந்தியாவில் பள்ளிகள் இயங்கி வந்தது. இங்கிலாந்தில் முதல் பள்ளி தொடங்கப்பட்ட 1811ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 7,50,000 குருகுலங்கள் இருந்ததன. இவ்வாறு சிறப்பாக இயங்கி வந்த தமிழர்களின் குருகுலக்கல்வி முறையை கிறிஸ்தவ ஆங்கிலேய அரசு அழித்து இந்திய மக்கள் மீது ஆங்கில கல்வியை திணித்தது", என்று ‘இந்து மக்கள் கட்சி’யின் தலைவர் அர்ஜீன் சம்பத் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்.
தமிழர்களின் குருகுலக்கல்வியை தடுத்து அழித்து ஆங்கில கல்வியை திணித்தது கிறிஸ்தவ ஆங்கிலேய அரசு! pic.twitter.com/lqoDxJ1xsv
உண்மை என்ன?
இந்கிலாந்தில் பள்ளிக்கல்வி குறித்து தேடிய போது, டெரெக் கில்லார்ட் என்பவர் எழுதிய ‘Education in the UK: a history’ என்ற புத்தகத்தை காணமுடிந்தது. அதில், இங்கிலாந்து ரோம் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்திலே, ‘ரோம் பேரரசின் ஆட்சிக்கு தகுந்த ஆட்களை உருவாக்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டதாக’ குறிப்பிடப்படுகிறது. ஆனால், இது எல்லோருக்குமான பள்ளிகள் அல்ல. இங்கிலாந்தில் அன்றைய காலத்தில் இருந்த உள்ளூர் தலைவர்களின் மகன்களுக்கானது மட்டுமே.

மேலும் தேடியதில், ‘THE BEGINNINGS OF MODERN HIGHER EDUCATION IN ENGLAND’ என்ற ஆய்வுக் கட்டுரையை காணமுடிந்தது. அதில் 13ஆம் நூற்றாண்டிலே ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் இங்கிலாந்தில் நிறுவப்பட்டதாக குறிப்பிடுகிறது.
மேலும், இடைக்காலத்திலும் (Medieval Period), மறுமலர்ச்சி காலத்திலும் (Renaissance Period) கல்வி பெரும்பாலும் சர்ச்சுகளின் அதாவது மத நிறுவனங்களின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. 17ஆம் நூற்றாண்டில் தான் மத எதிர்ப்பாளர்களும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டது. 19ஆம் நூற்றாண்டு ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்னர்தான் இங்கிலாந்தில் கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடைய வாய்ப்புகள் ஏற்பட்டது என்று அந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

இதேபோல் இந்தியாவிலும் குருகுல பள்ளிகள் என்பது உயர்சாதியினர் மட்டுமே படிக்கும் வகையில் இருந்தது. இதனால், 85 சதவீத மக்கள் கல்வியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததாக கே. ஜமனதாஸ் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். மேலும், பெண்கள் பெரும்பாலும் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. இதனால் இந்தியாவில் வெறும் 7 சதவீத மக்கள் மட்டுமே குருகுல கல்வி பெறமுடியும் என்ற நிலையிருந்தது.

பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய காலனிய ஆட்சியின் போது மெக்காலே கல்விமுறை நடைமுறை படுத்தப்பட்டது. அதுவும் இந்தியாவில் குறிப்பிட்ட சில மேட்டுக்குடி வர்க்கத்தை (அதாவது, இரத்திலும் நிறத்திலும் இந்தியர்களாகவும் அறிவில் ஆங்கிலேராகவும் இருக்கும் ஒரு வர்க்கத்தை) உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில், அன்றைய காலனிய நிர்வாகத்தால் மக்கள் அனைவருக்குமான கல்வி என்பதை சாதிக்கமுடியாது. இந்த வர்க்கம் இந்தியர்கள் அனைவருக்கும் கல்வி அளிக்கும் சாதனமாக அமைவார்கள் என்று மெக்காலே சொன்னார்.
இதிலிருந்து, குருகுலக் கல்வி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி அளித்து வந்ததாக அர்ஜீன் சம்பத் சொல்வது தவறான கூற்றாகும் என்பது நிரூபணமாகிறது. மேலும், ஆங்கிலேயர்கள் குருகுல கல்விக்கு பதிலாக மேற்கத்தியமயமான நவீன கல்விமுறையை புகுத்தியது அவர்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக தான். இதில் காலனிய அரசியல் சம்பந்தப்பட்டுள்ளதே தவிர மதம் அல்ல. அதனால், கிறிஸ்தவ ஆங்கிலேய அரசு இந்திய குருகுல கல்வியை அழித்ததாக அர்ஜீன் சம்பத் பேசுவது மத வெறுப்பு கண்ணோட்டத்தில் தான்.
முடிவு:
குருகுலக் கல்வி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி அளித்து வந்ததாகவும், அதனை ஆங்கிலேயர்கள்தான் அழித்தார்கள் என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் சேர்ந்த அர்ஜுன் சம்பத் தவறாக பரப்பிவருகிறார். மேலும், 19ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பள்ளிகள் நிறுவப்பட்டது எனவே ஆங்கிலேயர்கள் கல்வியில் இந்தியர்களை விட பின்தங்கி இருந்ததாக சொல்லப்படுவது தவறான தகவலாகும்.