யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பல ஆய்வறிக்கைகளை ஆய்வு செய்ததில், நெற்றியில் விபூதி போன்ற திலகம் வைப்பதற்கு பின்னால் எந்த அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை என்பதை அறிய முடிந்தது.
பரவிய செய்தி
நெற்றியில் பொட்டு வைப்பதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளன. நெற்றிப் பொட்டுக்கு பின்புறத்தில் சிவ லிங்கம் வடிவில் கூம்புச் சுரப்பி உள்ளது .இந்த கூம்புச் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை யோசிக்கவும் உணரவும் முடியும். இதை தூண்டுவதற்காகத் தான் நெற்றியில் விபூதி, குங்குமம், பொட்டு வைக்கும் ஒரு அறியவியல்பூர்வமான ஏற்பாட்டைச் செய்துள்ளனர். - பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்
Whatsapp:
விரிவான விளக்கம்
நெற்றியில் பொட்டு வைப்பதற்க்கு பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அவ்வீடியோவில் பேசியுள்ள அஸ்வத்தாமன், “நெற்றியில் பொட்டு வைப்பதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளன. நெற்றிப் பொட்டுக்கு பின்புறத்தில் சிவ லிங்கம் வடிவில் கூம்புச் சுரப்பி உள்ளது. இந்த கூம்புச் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை யோசிக்கவும் உணரவும் முடியும். இதை தூண்டுவதற்காகத் தான் நெற்றியில் விபூதி, குங்குமம், பொட்டு வைக்கும் ஒரு அறியவியல்பூர்வமான ஏற்பாட்டைச் செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் உண்மை தானா என்பதை அறிய முதலில் கூம்பு சுரப்பி குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். அவ்வாறு ஆய்வு செய்ததில், கார்பஸ் கால்சத்தின் பின் பகுதிக்கு அடியில் அமைந்துள்ள பினியல் சுரப்பி (Pineal Gland) தான் கூம்பு சுரப்பி என்று அழைக்கப்படுவதை அறிய முடிந்தது. இது மூளையில் உள்ள ஒரு சிறிய சுரப்பி. மெலடோனின் என்ற ஹார்மோனை சுரப்பதும் இதுவே.

ஆனால் கூம்பு சுரப்பி குறித்து பல வதந்திகள் பரவ முக்கிய காரணமாக இருப்பது “Dimethyltryptamine (dmt)” எனும் பொருள். நம் உடலில் கூம்புச் சுரப்பி தான் dmtயை சுரக்கிறது, இந்த dmt மூலம் தான் உடலைக் கடந்த வேறு பரிமாணங்களுக்கு செல்ல முடியும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இதுகுறித்து 2017இல் வெளியான “N,N-dimethyltryptamine and the pineal gland: Separating fact from myth” என்ற ஆய்வறிக்கையில், Pineal gland மற்றும் dmt குறித்து பல நம்பிக்கைகள் இருந்தாலும் அறிவியல்ரீதியாக இவை உறுதிசெய்யப்படவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, “Pineal Gland—A Spiritual Third Eye: An Odyssey of Antiquity to Modern Chronomedicine” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்விலும், மூன்றாம் கண் மற்றும் அதன் சக்திகள் என்ற Mystery குறித்த உண்மைகளை இனிவரும் காலங்களில் அறிவியல் கண்டறியுமென நம்பிக்கை உள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நெற்றியில் விபூதி போன்ற திலகம் வைப்பதற்கு பின்னால் அறிவியல் உள்ளது, அதுவே கூம்புச் சுரப்பியை தூண்டுகிறது என முன்வைக்கும் வாதங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிய முடிகிறது. மேலும் கூம்புச் சுரப்பி குறித்து உலகம் முழுவதும் இது போன்ற பல கட்டு கதைகள் உள்ளன என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், நெற்றியில் பொட்டு வைப்பதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ள கருத்துகளுக்கு அறிவியல்பூர்வமான சான்றுகள் எதுவும் இதுவரையில் இல்லை என்பதை அறிய முடிகிறது.