யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 ஆம் ஆண்டில், திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் குமரகுருதாச சுவாமி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் உள்ளிட்ட திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன். திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள். தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது, இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை. மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள். சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், காமாட்சிபுரம் ஆதினம் இரண்டாவது குரு மகா சன்னிதானம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

விரிவான விளக்கம்
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24, 25 அன்று கோலாகலமாக நடைபெற்றது. அப்போது அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டதாகவும், இதுவரை ஒரு குழந்தையை அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை எனவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது… pic.twitter.com/mTICcVIiGp
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடினோம். அப்போது நவம்பர் 2, 2024 அன்று அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாச சுவாமி கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, சென்னை கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியரின் கந்தசஷ்டி பாராயணம் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திருவான்மியூர், அருள்மிகு பாம்பன் குமரகுருதாச சுவாமி திருக்கோயிலில் இன்று (02.11.2024) கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, சென்னை, கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியரின்(1/2) pic.twitter.com/dZxTXnldP8
இது குறித்து மேலும் தேடிய போது, ”சென்னை: மாணவ மாணவிகளின் விருப்பத்தின் பேரிலேயே கந்த சஷ்டி கவசம் பாட அனுமதி – அமைச்சர் சேகர்பாபு” என்ற தலைப்பில் நவம்பர் 3, 2024 அன்று புதிய தலைமுறை ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாட 738 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 12 முருகன் கோவில்களில் மாணவர் மாணவிகள் கந்த சஷ்டி பாராயணம் பாடுவார்கள் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் ”கோவில்களில் பள்ளி, கல்லூரி மாணவியரை கந்த சஷ்டி கவசம் பாட வைக்க எதிர்ப்பு - அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன?” என்ற தலைப்பில் BBC ஊடகத்தில் நவம்பர் 8, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோயில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளதாகவும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யவில்லை என்று முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பரப்பி வரும் செய்திகள் தவறானவை. கடந்த 2024 ஆம் ஆண்டில், மாணவ, மாணவிகளின் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.