யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இத்திட்டத்தின் கீழ் கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டுமே 8 நவகிரக கோவில்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக 40.94 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
‘ஒன்றிய சுற்றுலாத் துறையின் ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் கோவில்களை புனரமைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட பெறவில்லை’ - அண்ணாமலை.
விரிவான விளக்கம்
தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ‘கோவில்களை புனரமைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவும் ஒன்றிய அரசு, Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குகிறது. ஆனால் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட பெறவில்லை’ என்று பேசியிருக்கிறார்.
உண்மை என்ன?
ஒன்றிய சுற்றுலாத்துறை ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் நிதி ஒதுக்கியிருக்கிறதா? என்பது குறித்து தேடினோம். கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றைக் காணமுடிந்தது.

அதன் படி, ‘PRASHAD’ திட்டத்தின் கீழ், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டுமே 8 நவகிரக கோவில்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக 40.94 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய சுற்றுலா துறை ஒதுக்கியுள்ளது.

அதேபோல் 2024ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் ஒன்றிய சுற்றுலாத் துறை 1646.99 கோடி மதிப்பில் நாடு முழுவதும் 48 திட்டங்களை (projects) செயல்படுத்தி வருகிறது. அவற்றில் 2 திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள 8 நவக்கிரகக் கோயில்களை மேம்படுத்தும் திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களிலிருந்து, ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டுமே 40.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
முடிவு:
‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் சுற்றுலா துறையிடமிருந்து ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்று பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை தவறான தகவலை பரப்பி வருகிறார்.