YouTurn

அண்ணாவிற்கு மூக்கையா தேவர் பதவிப் பிரமாணம் செய்ததாக சீமான், காளியம்மாள் சொல்லும் பொய்!

அண்ணாவிற்கு மூக்கையா தேவர் பதவிப் பிரமாணம் செய்ததாக சீமான், காளியம்மாள் சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அண்ணாவுக்கு சபாநாயகராக இருந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தது மூக்கையா தேவர்தான் - சீமான், காளியம்மாள்

Instagram link

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் நிகழ்ச்சி ஒன்றில் “அண்ணா முதலமைச்சராகிறார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததே எங்க தாத்தா மூக்கையா தேவர் தான். ஏன் வரலாற்றை நீங்கள் சொல்லித்தரவில்லை. வந்தவர் போனவர் வரலாற்றை எல்லாம் பாடப் புத்தகத்தில் வைத்தீர்கள். ஆனால், கல்வி வள்ளலாக இருந்து என் மண்ணின் எளிய மக்களுக்கான அரசாங்கத்தை நிறுவி ஒரு சாமானியனும் சாதனை படைக்க முடியும் என்று சரித்திரமாக வாழ்ந்த ஒரு மனிதரின் வரலாற்றை ஏன் பாடப் புத்தகத்தில் வைக்கவில்லை” எனப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 




காளியம்மாள் மட்டுமின்றி சீமானும் இது போன்ற தகவலை 2023, ஏப்ரல் மாதம் மூக்கையா தேவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியதாக ஒன் இந்தியா தளத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்தியில், “அண்ணாவுக்கு தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தது மூக்கையா தேவர்தான்” என்றுள்ளது.

காளியம்மாள் பேசிய வீடியோ தொடர்பாகத் தேடியதில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவில் பேசியுள்ளதை (3.41) காண முடிந்தது. 



உண்மை என்ன ? 

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 1967ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு (மதராஸ்) சட்டமன்ற தேர்தலில் 170 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று முதன் முதலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பொதுச் செயலாளர் அண்ணா (சி.என்.அண்ணாதுரை) போட்டியிடவில்லை. அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார். 

தமிழ்நாட்டில் ஆட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றிருப்பினும் 1967 மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக அண்ணா பதவி ஏற்றார். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அதன் ஆளுநர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதன்படி அப்போது ஆளுநராக இருந்த சர்தார் உஜ்ஜல் சிங் என்பவர் அண்ணாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். 



இந்திய அரசியலமைப்பின் படி பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருவர் முதலமைச்சராகப் பதவி ஏற்கலாம். அப்படி பதவி ஏற்ற பிறகு 6 மாதத்திற்குள் அம்மாநிலத்தில் சட்டமன்ற மேலவை அல்லது சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக வேண்டும். அதன்படி அண்ணா 1967, ஏப்ரல் மாதம் சட்ட மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றார் (தமிழ்நாட்டில் சட்ட மேலவை 1986ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்டது).



ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்குவதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். அதன்படி 1967 மார்ச் 13ம் தேதி தற்காலிக சபாநாயகராக மூக்கையா தேவர் நியமிக்கப்படுகிறார். அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்றது மார்ச் 6ம் தேதி. மூக்கையா தேவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டது மார்ச் 13ம் தேதி. இப்படி இருக்கையில் எப்படி மூக்கையா தேவர் அண்ணாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க முடியும் ? 



தமிழ்நாட்டின் நான்காவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 1967, மார்ச் 15 முதல் 30 தேதி வரையில் நடைபெற்றுள்ளது. அதில் மூக்கையா தேவர் தற்காலிக சபாநாயகராக இருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (கீழவை) பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த இடத்தில் அண்ணா சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



இதற்கிடையில் சி.பா.ஆதித்தனார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி 1967, மார்ச் 17 முதல் 1968 ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் அவர் சபாநாயகராக இருந்தார் என அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  





மேலும், அண்ணா மேலவை உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் அவ்வவையின் தலைவராக (1964-70) M.A.மாணிக்கவேல் என்பவர் இருந்துள்ளார். அதன்படி மேலவை உறுப்பினர்களுக்கு மாணிக்கவேல் தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பார். ஆனால், நாம் தமிழர் கட்சியினரோ மூக்கையா தேவர்தான் அண்ணாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் எனத் தவறான தகவலைப் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க : முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய் !

மேலும் படிக்க : பெரியார் சுயசாதி பற்று கொண்டவர் என சீமான் கூறியது உண்மையா ?

முடிவு : 

நம் தேடலில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது மூக்கையா தேவர் என நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் காளியம்மாள் கூறும் தகவல் ஆதாரமற்றது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க