யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அசோக் ஸ்ரீநிதி அளித்த புகாரின் அடிப்படையில் முகமது இப்ராஹிம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
பரவிய செய்தி
பாமக நிர்வாகி அளித்த புகார் மீது தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரையே கைது செய்துள்ளது. - அன்புமணி ராமதாஸ்

விரிவான விளக்கம்
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர், தனக்கு யூடியூப் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அசோக் ஸ்ரீநிதி மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரூ.2,000 கோடி மோசடியை அம்பலப்படுத்திய பாமக நிர்வாகி மீது பொய்வழக்கு போடுவதா?@CMOTamilnadu @tnpoliceoffl pic.twitter.com/2uAfnmX0iw
அவ்வறிக்கையில் ”கோவை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் அவர் (அசோக் ஸ்ரீநிதி) புகார் அளித்துள்ளார். ஆனால், பல வாரங்கள் ஆகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், விசாரணைக்காக காவல்துறை அழைத்ததன் பேரில் தான் அவர் (அசோக் ஸ்ரீநிதி) காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு தமது புகார்மனு மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். இதற்காகத் தான் அவர் சைபர்கிரைம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
உண்மை என்ன?
பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த தகவல் குறித்துத் தேடினோம். பாமக-வின் கோவை மாவட்டச் செயலாளராக உள்ள அசோக் ஸ்ரீநிதி தனக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகக் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது உண்மை தான். ஆனால், அப்புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான தகவலாகும்.
அசோக் ஸ்ரீநிதி கைது செய்யப்பட்டது தொடர்பாக ’புதிய தலைமுறை’ ஊடகத்தில் கடந்த 13-ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவர் யூடியூப் மூலம் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து முகமது இப்ராஹிம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாகக் கோவை மாநகர சைபர் க்ரைம் அலுவலகத்துக்குச் சென்ற அசோக் ஸ்ரீநிதி, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் சுகன்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு “முகமது இப்ராஹிம் மீது ஏன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவில்லை? அவர் ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்?” எனத் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாகவே அசோக் ஸ்ரீநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அசோகின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தவறான தகவலைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவற்றிலிருந்து பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது. மேலும் அவர் காவல் நிலையத்தில் தகராறு செய்ததின் காரணமாகவே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முடிவு:
பாமக நிர்வாகி அளித்த புகார் மீது தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரையே கைது செய்துள்ளதாக அன்புமணி தனது அறிக்கையில் கூறிய தகவல் தவறானது. அசோக் ஸ்ரீநிதி அளித்த புகாரின் அடிப்படையில் முகமது இப்ராஹிம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.