யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்ததை திரித்து, அவர் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நகலை எரித்ததாக தவறாக பரப்புகிறார் அன்புமணி.
பரவிய செய்தி
‘மோடி அரசு நாடாளுமன்றித்தில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவின் நகலை முதல்வர் ஸ்டாலின் எரித்தார்’ - அன்புமணி, பாமக தலைவர்.
விரிவான விளக்கம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அன்புமணி, ’நாடாளுமன்றத்தில் மோடி கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட மசோதாவின் நகலை முதல்வர் ஸ்டாலின் எரித்தார்’ என்று குறிப்பிட்டார்.
உண்மை என்ன?
உண்மையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாமக்கல்லில் திமுகவினர் மசோதா நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி மறுவரையறை மசோதா நகலை தான் எரித்தனர், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அல்ல.

கடந்த ஏப்ரல் 16 முதல் 18ஆம் தேதி வரையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை நிரைவேற்ற நினைத்தது மோடி தலைமையிலான பாஜக அரசு.

ஆனால், 2023 செப்டம்பர் மாதமே ’நாரி சக்தி வந்தன் அதிநியம்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றிவிட்டது. அதனை அப்படியே அமல்படுத்துவதில் எந்த சிக்கலுமில்லை.
ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதா என்பது மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகும். இதனால் மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் தான் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதனை எதிர்த்தது. இந்த தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது பாஜக.

”மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள்” என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசியதும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால், தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டதை, எதிர்க்கட்சிகள் மகளிர் ஒதுக்கீட்டை எதிர்த்து பெண்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக தொடர்ந்து பொய்யான தகவலை பாஜகவினர் பரப்பி வந்தனர். அதனை தான் பாமக தலைவர் அன்புமணியும் செய்கிறார்.
முடிவு:
மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்ததை திரித்து, அவர் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நகலை எரித்ததாக தவறாக பரப்புகிறார் அன்புமணி.