யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் நாகபுஷ்பம் இமயமலையில் வளர்ந்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
“நாகபுஷ்பம்" இமயமலையில் வளர்ந்துள்ளது. இந்தப் பூ ஷேஷநாகத்தைப் போன்றது. இது 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும். இந்தப் பூவை வேறொரு குழுவிற்கு அனுப்புங்கள், அதனால் அவர்கள் இந்தப் பூக்களை பார்க்க முடியும்.
விரிவான விளக்கம்
36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் நாகபுஷ்பம் இமயமலையில் வளர்ந்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை “Google Reverse Image Search” பயன்படுத்தி தேடிப் பார்த்ததில், இந்தோனேஷியாவில் பூக்கும் அரியவகை பூ என்று கூறி கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே இதே புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காணமுடிந்தது.

“Little Things” இணையதளப் பக்கத்தில், பரவி வரும் இதே புகைப்படம் “கடல் பேனா“ (Sea Pen) என்று குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனவே இந்த புகைப்படம் எப்போது யாரால் எடுக்கப்பட்டது என்பது குறித்த ஆய்வைத் தொடங்கினோம். “Photo Net“ என்ற இணையதளப் பக்கத்தில், பரவி வரும் இந்த புகைப்படம் முதன்முதலாக Gordon B என்ற புகைப்பட கலைஞரால் கடந்த 2013ஆம் ஆண்டில் “Sea Feather” என்று குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இதன்மூலம் இவை 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இமயமலையில் பூக்கும் “நாக புஷ்பம்” அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் ‘Animal Fact Files’ மற்றும் ‘BBC Earth’ போன்ற யூடியூப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்களின் மூலமும், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது “கடல் பேனா” (Sea Pen) என்பதை உறுதி செய்ய முடிந்தது.
எனவே கடல் பேனா என்றால் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ததில், “Britannica” இணையதளப் பக்கத்தில், இவை இவை பெனாடுலாசியா (Pennatulacea) என்ற குடும்பத்தின் வரிசையில் உள்ள 300 இனங்களில், அந்தோசோவா (பைலம் சினிடாரியா) என்ற வகுப்பைச் சேர்ந்த ஒருவகை கடல்வாழ் உயிரினம் என்பதை அறிய முடிந்தது. பார்ப்பதற்கு இறகு பேனாக்களின் (Quill Pens) வடிவத்தை ஒத்திருப்பதால், இது "கடல் பேனா" என்று அழைக்கப்படுகிறது.

எனவே கூகுளில் “Pennatulacea” என்று குறிப்பிட்டு தேடிப் பார்த்ததில், “கடல் பேனா” என்று குறிப்பிட்டு, பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்றே பல புகைப்படங்கள் கிடைத்தன.

இதன்மூலம் கடல்வாழ் உயிரினமான “கடல் பேனாவின்” புகைப்படத்தை, பலரும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இமயமலையில் பூக்கும் “நாக புஷ்பம்” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
மேலும் படிக்க: இமயமலையில் 99 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிவலிங்க பூவா ?| உண்மை என்ன ?
மேலும் படிக்க: 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பகோடா மலரா ?| ஃபேஸ்புக் வதந்தி.
முடிவு:
நம் தேடலில், 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இமயமலையில் பூக்கும் “நாக புஷ்பம்” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், புகைப்படத்தில் இருப்பது கடல்வாழ் உயிரினமான “கடல் பேனா” என்பதையும் அறியமுடிகிறது.
