யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024-25 நிதியாண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு அடைந்தது, கடந்த 10 ஆண்டுகளில் இதுவே உயர்ந்த வளர்ச்சி விகிதம் என்று செய்திகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
பரம்பரை கொத்தடிமைகள் ரீல் அறுந்தது கூட தெரியாமல் கதை அளக்கும் அவலம்.
10 ஆண்டு அஇஅதிமுக ஆட்சி காலத்தில் குடுத்த வளர்ச்சியை கடந்த 4 ஆண்டுகளில் ஒரு தடவை கூட எட்டாமல் வெத்து விளம்பரம் , தரம் தாழ்ந்த விமர்சனம் மூலம் ஆட்சி செய்யும் அறிவில்லாத பொம்மை மற்றும் பரம்பரை கொத்தடிமைகள்.

விரிவான விளக்கம்
அதிமுக 10 ஆண்டுகள் (2011 - 2021) ஆட்சியில் இருந்தபோது, ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தற்போதைய திமுக அரசால் கடந்த நான்கு ஆண்டிலில் ஒருமுறை கூட எட்டமுடியவில்லை என்று அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன் தனது எக்ஸ் பக்கத்தில் 2012 முதல் 2024 வரையிலான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தை பதிவிட்டுள்ளார்.
பரம்பரை கொத்தடிமைகள் ரீல் அறுந்தது கூட தெரியாமல் கதை அளக்கும் அவலம்.
10 ஆண்டு அஇஅதிமுக ஆட்சி காலத்தில் குடுத்த வளர்ச்சியை கடந்த 4 ஆண்டுகளில் ஒரு தடவை கூட எட்டாமல் வெத்து விளம்பரம் , தரம் தாழ்ந்த விமர்சனம் மூலம் ஆட்சி செய்யும் அறிவில்லாத பொம்மை மற்றும் பரம்பரை கொத்தடிமைகள். pic.twitter.com/VN7ix8vySr
உண்மை என்ன?
அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யனின் கூற்று சரி தானா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது ஏப்ரல் 6, 2025 அன்று ”9.69 சதவீத வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் தமிழகம் புதிய உச்சம்: நாட்டிலேயே முதலிடம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்” என்று இந்து தமிழ் ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் இந்தியாவில் நடப்பு 2024-25ம் ஆண்டில் தமிழகம் 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் (பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடுவது) மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்றும், கடந்த 2023-24-ல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25-ல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சக தரவுகள் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து News 18 Tamilnadu ஊடகத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், 8 விழுக்காட்டிற்கு மேல் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 9.69 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் அதிகபட்சமாக சேவைகள் துறை 12.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், குறைந்தபட்சமாக விவசாயம் மற்றும் கால்நடைகள் துறை 0.15 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

அதே போல் New Indian Express, The Hindu போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகியிருப்பதை பார்க்கமுடிந்தது.

முடிவு :
நம் தேடலில், அதிமுக 10 ஆண்டுகள் (2011 - 2021) ஆட்சியில் இருந்தபோது, ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தற்போதைய திமுக அரசால் கடந்த நான்கு ஆண்டில் ஒருமுறை கூட எட்டமுடியவில்லை என்று அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன் தவறாக பரப்புவது தெரியவந்தது.