யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, தூத்துக்குடி மாவட்ட எம்.பி. கனிமொழி சந்திக்கவில்லை என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படம் ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. மார்ச் 13 அன்று கனமொழி எம்.பி, சிறுமியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பரவிய செய்தி
அடிச்சான் பாரு போஸ்டர்... அதுலயும் அந்த விளக்கு புடிக்கிற அழகு இருக்கே...@KanimozhiDMK

விரிவான விளக்கம்
விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தி, கொல்லப்பட்ட மாணவியின் உறவினர்களும், குடும்பத்தினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தூத்துக்குடி மாவட்ட எம்.பி. கனிமொழி சந்திக்கவில்லை என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் இந்த போஸ்டர் ஆய்வு செய்தோம். அந்த போஸ்டரின் கீழே Gemini AI-ன் லோகோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. இதை வைத்து, இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிச் செய்யமுடிந்தது. இருந்தாலும், இதை உறுதி செய்ய பரவி வரும் வீடியோவை Hive Moderation செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் புகைப்படம், 99.9% AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.


இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்தது குறித்து தேடினோம். அப்போது Prabhakar Tamilarasu என்ற எக்ஸ் பக்கத்தில் மார்ச் 13, 2026 அன்று, பாதிப்பை உணர்ந்து, பாதிக்கப்பட்டவரை சந்தித்து, அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து ஆறுதல் சொல்லும் அரசியல் தான் ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் என்று குறிப்பிட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை கனிமொழி சந்தித்த வீடியோ பதிவிட்டிருந்தார்.
பொறுப்பேற்றுக்கொள்தல் என்பது யாதெனில், அது இதுதான். Reflect. React. Respond.
பாதிப்பை உணர்ந்து, பாதிக்கப்பட்டவரை சந்தித்து, அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து ஆறுதல் சொல்லும் அரசியல் தான் ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும். pic.twitter.com/uJ3z7YYMqT
இது குறித்து மேலும் தேடிய போது, Polimer News, Zee News போன்ற ஊடகங்களிலும் மார்ச் 13,2026 அன்று, விளத்திகுளத்தில் உள்ள சிறுமியின் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அப்பகுதி மக்கள் அவரிடம் முற்றுகையிட்டு அவரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, எம்.பி. கனிமொழி சந்திக்கவில்லை என்று பரவும் போஸ்டர் ஜெமினி ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. மேலும் மார்ச் 13 அன்று, சிறுமியின் குடும்பத்தை சந்தித்து கனமொழி ஆறுதல் கூறிய வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.