யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கேரள பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் அழகான மனைவி' என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கேரளப் பேருந்தில் பயணித்த தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாகக் கூறி ஒரு பெண், தீபக் (42) என்ற நபரை குற்றம் சாட்டி சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனவரி 18 அன்று தீபக் அவரது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் 'கேரளப் பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் அழகான மனைவி' என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தீபக்கின் மனைவி குறித்து எந்த செய்திகளும் கிடைக்கவில்லை.
ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் தீபக்கின் தாய் மற்றும் தந்தை குறித்தே செய்திகள் காணப்பட்டன. எதிலும் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்று, தீபக்கின் மனைவி என்று குறிப்பிட்டு புகைப்படத்துடன் செய்திகள் இல்லை. மேலும் அவர் திருமணமானவரா என்பது குறித்து கூட எந்த ஊடகத்திலும் செய்தி இல்லை.
அப்படி இருக்க, தீபக்கின் மனைவி என்று குறிப்பிட்டு புகைப்படம் பரவியதால், சந்தேகம் எழுந்தது. மேலும் பரவி வரும் புகைப்படத்தில் காணப்படும் பெண்ணின் தோற்றமும் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே, “Hive Moderation” இணையதளப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் தான் என்று நமக்கு உறுதிபடுத்தியது.
இதே போன்று, “Sight Engine “ இணையதளப் பக்கத்திலும் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளோம்.
முடிவு:
நம் தேடலில், 'கேரளப் பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் அழகான மனைவி' என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.