யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இரண்டு ஆண்டுகள் பழைய சம்பவத்தை தற்போது தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்த மறுநாள் நடந்ததாக தவறான தகவலை அதிமுக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறது.
பரவிய செய்தி
கேப்டனின் ஆன்மாவிற்கே திமுகவோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை.
ஏற்றும் போதே அறுந்து விழுந்த தேமுதிக கொடி. தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியின் ரிசல்ட் தெரியுதே.


விரிவான விளக்கம்
இந்தாண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால், பிரதான கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, தவெக என மூன்று பிரதான அணிகள் இருக்கின்றன. தேமுதிக நீண்ட நாட்களாக கூட்டணி குறித்து பேசி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி திமுகவுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றும் போது கொடி அறுந்து விழும் வீடியோவை பதிவிட்டு, ’தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தது விஜயகாந்த் ஆன்மாவிற்கு பிடிக்கவில்லை, அதனால் தான் கொடி அறுந்து விழுந்தது’ என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.
கேப்டனின் ஆன்மாவிற்கே திமுகவோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை.
ஏற்றும் போதே அறுந்து விழுந்த தேமுதிக கொடி.
தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியின் ரிசல்ட் தெரியுதே. pic.twitter.com/H9rGQXKcus
நல்ல சகுனம், 200 confirm 🔥🔥🔥pic.twitter.com/6jWwCHXuGL
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ’புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.
2024 ஜனவரி 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், 'பிரேமலதா தேமுதிக கொடியை ஏற்றும் போது கொடி அறுந்து கீழே விழுந்ததாகவும், இருப்பினும் கொடியை மீண்டும் ஏற்றிவிட்டு பிரேமலதா நம்பிக்கையுடன் பேட்டியளித்ததாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தேடியபோது, ’புதிய தலைமுறை’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ’விஜயகாந்த் 2023 டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அதனால் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு பின்னர், 2024 ஜனவரி 28ஆம் தேதி மீண்டும் தேமுதிக முழுமையாக ஏற்றப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு 2024 ஜனவரி 28ஆம் தேதி மீண்டும் முழுமையாக கொடியேற்றும் போது கயிறு அறுந்து கொடி கீழே விழுந்ததாகவும் அது சரி செய்யப்பட்டு மீண்டும் அது ஏற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து இந்த சம்பவமும் வீடியோவும் இரண்டு ஆண்டுகள் பழையது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
இரண்டு ஆண்டுகள் பழைய சம்பவத்தை தற்போது தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்த மறுநாள் நடந்ததாக தவறான தகவலை அதிமுக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறது.