யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அப்படி ஒரு பெயரே அரசு வரையறுத்த பட்டியலில் இல்லை. உமாயூன் பேசியது தவறான தகவல்.
பரவிய செய்தி
தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவரின் ஜாதி சான்றிதழில் ‘ஆதி தமிழர்’ என்றுள்ளது. தமிழரின் சான்றிதழில் ‘ஆதி திராவிடர்’ என்றுள்ளது. - உமாயூன் கபீர் (நாதக)

விரிவான விளக்கம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உமாயூன் கபீர், தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ் பற்றிப் பேசக்கூடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அவர் பேசியது: மாணவர்களின் ஜாதி சான்றிதழில் ’ஆதி தமிழர்’ என்று வரவேண்டிய இடத்தில் ’ஆதி திராவிடர்’ என்று வரும். ஆனால், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் ஜாதிச் சான்றிதழில் ’ஆதி தமிழர்’ என்று வரும். தமிழராய் இருப்பவரின் சான்றிதழில் ஆதி திராவிடர் என்று வரும்.
இந்த #கருமாந்திரத்தை ஒழிக்கவாது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் pic.twitter.com/xG0TD21n38
— மு. சிவக்குமார் நாதக (@SivaKum56664767) July 9, 2024
உண்மை என்ன?
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் பகுதியில் கடந்த 5ம் தேதி உமாயூன் பேசிய வீடியோ நாம் தமிழர் கட்சியின் அதிகாரப் பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் சிறு பகுதியைதான் அக்கட்சியினர் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கான அறிவுரைகளைத் தேர்வாணையம் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அப்படி 2022, மார்ச் மாதம் வெளியிட்டதில், ’ஆதி தமிழர்’ என்கிற எந்த ஜாதி பெயரும் குறிப்பிடப்படவில்லை.
அதில் பட்டியல் ஜாதிகள் என 76 ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ’ஆதி ஆந்திரர்’, ‘ஆதி திராவிடர்’, ’ஆதி கர்நாடகா’ என்று தான் உள்ளன. ஆதி தமிழர் என்கிற பெயரே இல்லை. இதேபோல் பட்டியல் பழங்குடியினர் என 36 ஜாதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் அப்படி எந்த ஜாதி பெயரும் இல்லை. ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் பட்டியலிலும் உமாயூன் சொல்வது போல் ‘ஆதித்தமிழர்’ என்ற ஜாதி பெயரே இல்லை.

மேலும் உமாயூன் அதே வீடியோவில் ஆதி திராவிடரின் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு குறைத்தது தொடர்பாகச் சட்டமன்றத்தில் உள்ள 46 தனித்தொகுதி உறுப்பினர்கள் பேசியதில்லை எனக் கூறியுள்ளார்.
பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு குறைத்துள்ளது உண்மை தான். அதே நேரத்தில் மாநில அரசு வழங்கும் உதவித்தொகை உயர்த்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பட்டியலின மாணவர்களின் கல்விக்காக அவர்களின் படிப்பிற்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.1,200 முதல் ரூ.4,200 வரை வழங்கப்பட்டு வந்தது.
இதனை உயர்த்தி ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் 2021 டிசம்பர் மாதம் அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப் படியை மத்திய அரசின் திட்டத் தொகைக்கு இணையாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, வீட்டிலிருந்து பள்ளி வரும் மாணவர்களுக்குப் படிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.2,500 முதல் ரூ.7,000 வரையும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.13,500 வரையும் உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ. 8.79 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித் தொக்கைப்பற்றி அரசு எந்த முன்னெடுப்பையும் எடுக்காததுபோல் பேசியுள்ளார்.
முடிவு: தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு ’ஆதித்தமிழர்’ என ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உமாயூன் பேசிய தகவல் தவறானது. அப்பெயரில் யாருக்கும் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை. https://www.tnpsc.gov.in/static_pdf/document/instructions-to-candiates.pdf https://www.youtube.com/watch?v=howja2NYxlc https://socialjustice.gov.in/public/ckeditor/upload/93101672829095.pdf