யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
மோடியின் வளர்ச்சி நண்பர்களே
விரிவான விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில் மழை பெய்து குண்டும் குழியுமாக உள்ள சாலை ஒன்றில் வாகனம் ஒன்று செல்வதையும், வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே வாகனத்தின் மேல் அமர்ந்திருக்கும் நபர்களில் ஒருவர் கீழே விழுவதையும் காண முடிகிறது.
"ஸ்பேஸ் டெக்னாலஜி"
— ETHI SUNDAR🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) August 28, 2024
ஸ்பெஷல் எடிஷன் pic.twitter.com/kgOaT0tGLY
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Buletin iNews” என்ற யூடியூப் பக்கத்தில் “லாபுஹான் பதுவில் கடுமையாக சேதமடைந்த சாலையை கடந்து சென்றதால் கார் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வைரலானது“ என்று குறிப்பிட்டு பரவி வரும் இதே வீடியோ கடந்த 2022 அக்டோபர் 01 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
லாபுஹான் பது எங்கிருக்கிறது என்பது குறித்து தேடியதில், இது இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதே போன்று “POSKOTA_Network“ யூடியூப் பக்கத்திலும் இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறி பதிவு செய்யப்பட்டிருத்தைக் காண முடிந்தது.

எனவே இது குறித்து மேலும் தேடியதில், “Metro Tv News“ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு கடந்த 2022 செப்டம்பர் 30 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், வடக்கு சுமத்ராவின் வடக்கு லாபுஹான் பது, ஜம்பூர் 9 பகுதியில் மோசமாக சேதமடைந்த சாலையின் காரணமாக பயணி ஒருவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்ததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாயுள்ளது” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

முடிவு:
நம் தேடலில், இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, இந்தியாவில் எடுக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
