யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ 2021ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் பாதுகாப்புத்துறை நிறுவனம் ஏவுகணை சோதனை நடத்தியபோது போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை இந்திய ராணுவத்தின் அடுத்த சாதனை..!! பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய ராணுவத்தின் வளர்ச்சி சீறி பாய்கிறது..!!! #DRDO #ULPGM #MakeInIndia #Defence

விரிவான விளக்கம்
பறக்கும் டிரோன் ஒன்றிலிருந்து சிறிய ரக ஏவுகணை ஒன்று ஏவப்படும் வீடியோக் காட்சியை பதிவிட்டு, ’இந்த சிறிய ரக ஏவுகணை ’ULPGM’ என்றும் இதனை இந்திய பாதுகாப்புத் துறை நிறுவனமான ‘DRDO’ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாகவும்’ இந்துத்துவவாதி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை இந்திய ராணுவத்தின் அடுத்த சாதனை..!!
பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய ராணுவத்தின் வளர்ச்சி சீறி பாய்கிறது..!!!#DRDO #ULPGM #MakeInIndia #Defence pic.twitter.com/1G1NRKMh0O
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Bursada Bugun’ என்னும் துருக்கி மொழி செய்தித்தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியுள்ள இந்த செய்தி, துருக்கி நாட்டின் பாதுகாப்புத் தொழிற்துறையின் தலைவர் இஸ்மாயில் டெமிர் இந்த ஏவுகணை குறித்து தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் எழுதியுள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்மாயில் டெமிர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, ”இந்த சிறிய ரக ஏவுகணையான ‘METE’, Laser ஒளியின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடியது. இதனை ’ROKETSAN’ என்ற துருக்கி நாட்டு பாதுகாப்புத்துறை நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இது சோதனை செய்யப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளதைக் காணமுடிகிறது.

மேலு, ’ULPGM’ என்ற Keyword கொண்டு தேடுகையில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் அது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 2025 ஜூலை 25 அன்று வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், “ULPGM-V3 என்ற டிரோனிலிருந்து ஏவுப்படும் ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்புத்துறை நிறுவனமான ’DRDO’ உருவாக்கியுள்ளது பற்றியும் அதனை ஆந்திரா மாநிலத்தில் உள்ள கர்னூல் என்னும் இடத்தில் வான்வெளியில் சோதனை செய்தது குறித்தும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துருக்கி நாட்டின் பாதுகாப்புத்துறை நிறுவனமான ’ROKETSAN’ தனது புதிய ரக ஏவுகணையை சோதனை செய்யும் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.
முடிவு:
இந்தியாவின் பாதுகாப்புத்துறை நிறுவனமான DRDO, ’ULPGM-V3’ என்ற புதிய ரக ஏவுகணையை சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால் 2021ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் பாதுகாப்புத்துறை நிறுவனம் நடத்திய ஏவுகணை சோதனையின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை, தற்போது ’ULPGM-V3’ சோதனையின் போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.