யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டு, வரதட்சணை கொடுமை காரணமாக தந்தை வீட்டில் வாழும் சிறுமியை கணவன் வீட்டார் பட்டப்பகலில் கடத்திச் சென்றுள்ளனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பட்டப் பகலில் சுற்றிலும் பலர் இருக்கும்போதே, சில நபர்கள் ஒரு பெண்ணை காரில் கடத்திச் செல்கிறார்கள். சுற்றியிருப்பவர்கள் தடுக்கமுயன்றும் அவர்களை மீறி பெண்ணை கடத்திச் செல்லும் வீடியோவை பதிவிட்டு, ’பாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆறு பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக’ சமூக வலைதளத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE NEW INDIAN EXPRESS’ வெளியிட்ட செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் தீக் என்ற மாவட்டத்தில் பட்டப்பகலில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் நடந்திருப்பதாக தெரியவருகிறது.

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, 10ஆம் வகுப்பு படித்துவரும் சிறுமி அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது நான்கு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இதனை தடுக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தியுள்ளனர். இது அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
’சிறுமியின் கணவன் வீட்டினர் தான் அந்த குற்றத்தை செய்திருப்பதாக’ சிறுமியின் தந்தை காவல்துறையில் புகாரளித்துள்ளார். ஆதா-சாதா (Aata-Saata) என்ற ’இரு குடும்பங்களுக்கு இடையில் பெண் கொடுத்து பெண் எடுக்கும்’ சமூக பழக்க வழக்கத்தின் பெயரில் இந்த சிறுமிக்கு சென்று ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுமிக்கு தற்போது 15 வயது என்பதும், அவர் தனது 14ஆவது வயதிலே திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் ‘Hindustan Times’ வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெரியவருகிறது. திருமணமான சில நாட்களிலே வரதட்சணை கொடுமை காரணமாக சிறுமி தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கிருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை கணவன் வீட்டார் கடத்தியுள்ளனர்.

இப்படி 18 வயது நிரம்பாத பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டம்படி குற்றமாகும். 2019-21 ஆண்டிற்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, இந்திய முழுவதும் 20 முதல் 24 வயது வரையில் இருக்கும் பெண்களில் 23% நபர்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. குழந்தை திருமணம் என்பது இந்தியாவில் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக உள்ளது.
இந்நிலையில், 15 வயது சிறுமி கணவன் வீட்டாரால் பட்டப்பகலில் கடத்தப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். அதுபற்றி எந்த செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை.
முடிவு:
குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி கணவன் வீட்டாரால் பட்டப்பகலில் கடத்தப்பட்டுள்ளார். ஆனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
