யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுவர்களே இல்லாத இந்த கழிவறைக் கோப்பைகள் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் கட்டப்பட்டதாகும். உத்தரப் பிரதேசத்தில் அல்ல.
பரவிய செய்தி
4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் பாஜக அரசை நினைத்து உலகமே வியக்கிறது. இந்தி படிச்சு தொலைங்கடா.

விரிவான விளக்கம்
மிகப் பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடும் விழாவாக பார்க்கப்படும் மஹாகும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும். 2025 ஆம் ஆண்டில், ஜனவரி 13 முதல் பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவிற்கான உள்கட்டமைப்பு (Infrastructure) ஏற்பாடுகளைச் செய்ய யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ரூ. 6,382 கோடி வரை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, கும்பமேளா நிகழ்விற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியில், 4000 கோடி ரூபாயைச் சுவர்களே இல்லாமல், அருகருகே இருக்கும்படியான கழிவறைகளைக் கட்டுவதற்காகவே செலவிடப்பட்டுள்ளதாகப் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Lx Saboj Ridoy999’ என்ற யூட்யூப் பக்கத்தில் இதே சம்பவத்தைக் காட்சிப்படுத்தும் வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது. 36 நொடிகள் கொண்ட வீடியோவிற்கு, ‘மிசானூர் ரஹ்மான் அஸ்ஹரி ஹுஸூர் சிட்டகாங் கல்லூரி மைதானத்திற்கு வருகை தருகிறார்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

’மிசானூர் ரஹ்மான் அஸ்ஹரி’ ’சிட்டகாங் கல்லூரி நிகழ்ச்சி’ ஆகிய keywords கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Bangla News 24’ செய்தித்தளத்தில் இதுபற்றிய செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘வங்கதேசத்தில் ’இஸ்லாமியச் சமூக நலப் பேரவை’-ன் சார்பாக சிட்டகாங் நகரில் உள்ள ’Chawkbazar Parade Ground’ என்ற இடத்தில் ஜனவரி 27-31 வரை ஐந்து நாட்கள் மதக் கூடுகை நடைபெறும் என்றும் இந்நிகழ்வின் இறுதி நாளின்போது பிரபல இஸ்லாமியச் சிந்தனையாளரான டாக்டர். மிஸானூர் ரஹ்மான் அஸ்ஹரி தலைமை வகிப்பார்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன்படி, ’Chawkbazar Parade Ground’ என்ற இடத்தை Google Map-ன் Street View-ல் தேடினோம். ’Chattogram College East Hostel Gate’ என்ற Location இந்த மைதானம் இருந்தது. அதன் அருகில் இரண்டு கட்டிடங்கள் இருப்பதைக் காண்கிறோம். இதே கட்டிடத்தை மேற்கண்ட யூட்யூப் வீடியோவிலும் பார்க்கிறோம்.

மேலும், கும்பமேளாவிற்காக 1.5 லட்சம் கழிவறைகள் அமைக்கப்படவிருப்பதாக வெளியிட்டுள்ள செய்திகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் சுவர்களுடன் கூடிய Mobile toilets வகைச் சேர்ந்தவைதான்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்று குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து கழிவறைகள் அமைக்கப்படும் முறை பொதுவாக கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு 'Squat Toilet' என்று பெயர். பொதுவாக இதுபோன்ற Squat Toilet-கள் அமைக்கப்படும் போது தார்ப்பாய் கொண்டு சுவர்கள் அமைக்கப்படுவது வழக்கம். இதுபற்றி நமது YouTurn தளத்தில் ஏற்கனவே கட்டுரை எழுதியுள்ளோம்.
இதிலிருந்து, சுவர்களே இல்லாத திறந்தவெளி கழிவறைக் கோப்பைகளை வைத்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த கழிவறை வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் அமைக்கப்பட்டதாகும். உத்தரப்பிரதேசத்தில் அல்ல என்பது தெளிவாகிறது. இது 'Squat Toilet' வகை கழிப்பறை ஆகும். இதனை தார்ப்பாய் கொண்டு சுவர்கள் அமைக்கும் முன்பாகவே எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
முடிவு:
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் அமைக்கப்பட்ட கழிவறைக் கோப்பைகளை உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகிறார்கள்.