யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பெரியார் சொன்ன தனித் தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்று 2022-ல் ஆ.ராசா பேசியதைத் திரித்துப் பொய் செய்தி பரப்புகின்றனர். மாலை மலர் இப்படி எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
எச்சரிக்கை...!!!! தமிழன் என்று ஒரு இனம் உண்டு! அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு!! வேண்டிவந்தால் உயிரை கொடுத்தாவது தனிதமிழ்நாடு உருவாக்குவான்...!!! -ஆர் ராசா

விரிவான விளக்கம்
திமுக-வின் துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனித்தமிழ்நாடு குறித்து கருத்து தெரிவித்ததாக ’மாலை மலர்’ ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அதில், ’வேண்டிவந்தால் உயிரை கொடுத்தாவது தனிதமிழ்நாடு உருவாக்குவான்’ என எச்சரிக்கை விடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய நியூஸ் கார்டில் ஆ.ராசாவின் பெயர் தவறாக உள்ளது. எனவே, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘22.02.2025’ என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு மாலை மலர் ஊடகத்தின் சமூக வலைத்தளத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேற்கொண்டு தனித்தமிழ்நாடு குறித்து ஆ.ராசா பேசியுள்ளாரா எனத் தேடியதில், 2022, ஜூலை மாதம் வெளியான செய்திகளைக் காண முடிந்தது.
திமுக சார்பில் 2022, ஜூலை மாதம் ’நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு’ நடைபெற்றது. அதில், ’மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியுள்ளார்.
இது தொடர்பாக ’புதிய தலைமுறை’ ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”’பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு’ என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எங்கள் தந்தையையும் (பெரியார்) ஒதுக்கிவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அமித்ஷாவுக்கு சொல்கிறேன், பிரதமருக்குச் சொல்கிறேன். உங்களைப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களைப் பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ ஊடகத்தில் ஆ.ராசா பேசிய வீடியோவுடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்ட செய்தியில் இருப்பது போன்று ‘தனி தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்’ என்றுதான் கூறியுள்ளார்.
தனித்தமிழ்நாடு தொடர்பாகச் சமீபத்தில் ஆ.ராசா பேசியதாக எந்த செய்தியும் இல்லை. மேலும் 2022-ல் பேசும் போதும் கூட பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டிதான் பேசியுள்ளார். இவற்றிலிருந்து ஆ.ராசா சொல்லாத கருத்தை மாலை மலர் ஊடகத்தின் பெயரில் போலியாக உருவாக்கிப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
தமிழன் உயிரை கொடுத்தாவது தனித்தமிழ்நாடு உருவாக்குவான் என ஆ.ராசா கூறியதாக மாலை மலர் பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது. மாலை மலர் அப்படி இந்த செய்தியையும் வெளியிடவில்லை. பெரியார் சொன்ன தனித் தமிழ்நாடு கேட்கும் நிலைக்குக் கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்று 2022-ல் ஆ.ராசா பேசியதைத் திரித்துப் பொய் செய்தி பரப்புகின்றனர்.