யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மோதிலால் நேரு அவர்களுக்கு ஸ்வரூப் ராணி என்ற ஒரு மனைவி மட்டுமே இருந்ததாகவும், இவர்களுக்கு பிறந்தவர்தான் ஜவகர்லால் நேரு என்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் இருக்கிறது.
பரவிய செய்தி
"பிரியங்கா " எங்க பரம்பரையைப் பற்றி மோடிக்கு என்ன தெரியும்ன்னு கேட்கப்போக....,* *வாட்ஸாப், F.B எல்லாம் நாறுது.*

விரிவான விளக்கம்
ஜவகர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேருவிற்கு ஐந்து மனைவிகள் இருந்ததாகவும்; ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் இஸ்லாமிய பின்னணியில் பிறந்தவர்கள் என்றும் குறிப்பிடும் குடும்ப வரைபடம் (Family Tree) ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
இது குறித்து இணையத்தில் தேடியதில், ‘இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம்’ Nehru Portal என்ற தளத்தில் நேரு குடும்பப் பின்னணி பற்றி வெளியிட்டுள்ள விவரங்களை காணமுடிந்தது.

அதன்படி, மோதிலால் நேருவிற்கு ’ஸ்வரூப் ராணி’ என்ற ஒரு மனைவி மட்டுமே இருந்ததாகவும், இவர்களுக்கு பிறந்தவர்தான் ’ஜவகர்லால் நேரு’ என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், மோதிலால் நேரு - ஸ்வரூப் ராணி தம்பதியருக்கு ’சரூப் குமாரி (என்கிற) விஜய லட்சுமி, கிருஷ்ணா’ என்ற இரண்டு மகள்களும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த Nehru Portal என்ற தளம், ‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின்’ கீழ் வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ’நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML)’ என்பது, இந்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பாகும். இதிலிருந்து இது அதிகாரப்பூர்வமான தகவல் என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.

மேலும் பரப்பப்படும் குடும்ப வரைபடத்தில், இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் ஜே. கான் என்ற பெர்ஸிய முஸ்லிம் என்றும், பின்னர் அவரது பெயர் பெரோஸ் காந்தி என்று மாற்றிக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்திரா காந்தியின் கணவர் பெயர் பெரோஸ் காந்தி, அவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர். பெரோஸ் காந்தி என்பதை திரிந்து பெரோஸ் கான் என்று மீண்டும் மீண்டும் பொய்யாக பரப்பிவருகிறார்கள். இதைப் பற்றி நமது YouTurn தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
மேற்குறிப்பிட்ட தகவல்களை கொண்டு பார்க்கையில், பரப்பப்படும் இந்த குடும்ப வரைபடம் என்பது எவ்வித ஆதாரமும் அற்ற பொய் என்பது நிரூபணமாகிறது. ஒரு முன்னாள் பிரதமரின் பிறப்பை கொச்சைப்படுத்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட 'பொய் வரைபடமாகும்' இது.
முடிவு:
மோதிலால் நேரு அவர்களுக்கு ஸ்வரூப் ராணி என்ற ஒரு மனைவி மட்டுமே இருந்ததாகவும், இவர்களுக்கு பிறந்தவர்தான் ஜவகர்லால் நேரு என்றும் அதிகாரப்பூர்வமான தகவல் இருக்கிறது. பரப்பப்படும் இந்த குடும்ப வரைபடம் அவதூறு பரப்புவதற்காகவே பொய்யாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.