யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரப்பப்படும் புகைப்படம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்ட பழைய புகைப்படம் ஆகும்.
பரவிய செய்தி
அக்கா தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்குன கடனை கட்டனும், பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு வேணும்ங்கிறதை செஞ்சுகொடுக்கனும்ன்னு ஊரை விட்டு மொழி தெரியாத எத்தனையோ தேசத்தில் நம்ம ஊர்க்காரங்க போய் மனசில்லாமல் உழைச்சிட்டு இருக்காங்க..
அது மாதிரி தான் மொழி தெரியாத ஊரில் இருந்து தமிழ் நாட்டுக்கு உழைக்க வர்றாங்க...
எத்தனையோ கனவுகளோட வந்திருப்பான் இந்த பையன்

விரிவான விளக்கம்
கடந்த 28ஆம் தேதி திருத்தணி இரயில் நிலையம் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நான்கு சிறுவர்கள் கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த நிகழ்வு தமிழ்நாட்டையே உழுக்கியிருக்கிறது.
இந்நிலையில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் படகில் சவாரி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தான் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞரின் குடும்பம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, இம்ரான் கான் லக்கியார் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
اب کہاں ڈھونڈنے جاؤ گے قاتل ہمارے
تم ہمارے قتل کا الزام بھی ہم ہی پہ رکھہ دو!
We Want#JusticeForSiraj #ChiefJusticeOfPakistan#ChiefJusticeOfSindh#Shotbago#Dsptbago#SSPBadin#DIGhyderabad#IGPSindh#SindhPolice@FatimaHalepoto @jannat_halepoto pic.twitter.com/1cdsMBvckN
அதில், ’Justice For Siraj’ என்றும் பாத்திமா ஹாலெபோடோ என்பவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் பார்க்கமுடிகிறது. இதனைக் கொண்டு தேடுகையில் பாத்திமா ஹாலெபோடோ என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞரின் ‘எக்ஸ்’ பக்கத்திலும் இந்த புகைப்படும் பகிரப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் இந்த ‘பாத்திமா ஹாலெபோடோ’ என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் என்பதும் தெரியவருகிறது.

திருத்தணி இரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த போது, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒடிசாவைச் சேர்ந்த ’சூரஜ்’ என்று கூறுகிறது. ஆனால் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிடும் அனைவரும் அவரது பெயரை ‘சிராஜ்’ என்று குறிப்பிடுகிறார்கள். மேலும், ’Justice For Siraj’ என்று Hashtag போடுகிறார்கள்.
மேற்கூறிய பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்த புகைப்படத்தில் அதே Hashtag-ஐ பயன்படுத்தியுள்ளதால், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் புகைப்படம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்ட பழைய புகைப்படம் என்பது தெரியவருகிறது.
முடிவு:
பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிடப்பட்ட பழைய புகைப்படத்தை தற்போது திருத்தணியில் தாக்குதலுக்குள்ளான வடமாநில இளைஞரின் குடும்பம் என்று தவறாக பரப்பி வருகிறார்கள்.