யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘எருமை மறம்’ என்னும் புத்தகத்தின் அட்டைப்படத்தை ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்று Edit செய்துள்ளார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் ‘‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்” என்ற புத்தகத்தை பரிசளித்து பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ’திமுக மக்களுக்கு கேடு தரும் கட்சி’ என்று அதிமுகவினர் உட்பட பலரும் சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன:
பரப்பப்ப்படும் இந்த புகைப்படத்தை கொண்டு Reverse Image Searching முறையில் தேடியதில், ‘Press Meet TV’ என்ற தளத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது.

அதில், 'எழுத்தாளர் மௌனன் யாத்ரிகா எழுதிய ‘எருமை மறம்’ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா 23.02.2024 சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூலை வெளியிட அதனை நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் பா. இரஞ்சித் பெற்றுக் கொண்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், தொல்.திருமாவளவனிடமிருந்து பா.ரஞ்சித் நூலை பெற்றுக்கொள்ளும் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த புகைப்படம் பரப்பப்படும் புகைப்படத்தை ஒத்ததாக இருப்பதைக் காண்கிறோம்.

இதிலிருந்து, ‘எருமை மறம்’ நூலின் அட்டைப்படத்தை பழ.நெடுமாறன் எழுதிய ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்ற நூலைக் கொண்டு Edit செய்யப்பட்டிருக்கிறது தெளிவாகிறது.
முடிவு:
‘எருமை மறம்’ நூலின் அட்டைப்படத்தை பழ.நெடுமாறன் எழுதிய ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்ற நூலைக் கொண்டு Edit செய்து அதிமுகவினர் உட்பட பலரும் தவறாக பரப்பிவருகின்றனர்.
