YouTurn

பள்ளிகளில் மிட்டாய் வடிவத்திலான போதைப்பொருள் விற்கப்படுவதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

பள்ளிகளில் மிட்டாய் வடிவத்திலான போதைப்பொருள் விற்கப்படுவதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தற்போது இதுபோன்ற மிட்டாய் வடிவத்திலான போதைப் பொருட்கள் பற்றிய பிரச்சனை இருப்பதாகச் செய்திகள் ஏதும் இல்லை.

பரவிய செய்தி

பள்ளிகளில் புதிய போதைப்பொருள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்த போதைப்பொருளின் பெயர்  'strawberry quick' என்பதாகும். ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று வாசனை உடைய இந்த  போதைப்பொருள்  பள்ளிக்கூட வளாகங்களிலே குழந்தைகளிடம் விற்கப்படுகிறது. இதனை மிட்டாய் என நினைத்து குழந்தைகள் உட்கொண்டதும் அவர்களுக்கு மோசமான நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் இதுபோன்ற மிட்டாய்களை அறிமுகமில்லாதவர்கள் கொடுத்தால் வாங்கவேண்டாம்.


image.png


 X Link

விரிவான விளக்கம்

இளம் சிவப்பு (Pink) நிறத்தில் Teddy Bear வடிவத்தில் மிட்டாய் போல இருக்கும் ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ’பள்ளிகளில் புதிய போதைப்பொருள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்த போதைப்பொருளின் பெயர்  'strawberry quick' என்பதாகும். ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று வாசனை உடைய இந்த  போதைப்பொருள்  பள்ளிக்கூட வளாகங்களிலே குழந்தைகளிடம் விற்கப்படுகிறது. இதனை மிட்டாய் என நினைத்து குழந்தைகள் உட்கொண்டதும் அவர்களுக்கு மோசமான நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் இதுபோன்ற மிட்டாய்களை அறிமுகமில்லாதவர்கள் கொடுத்தால் வாங்கவேண்டாம் என்று எச்சரிக்கை’ என்று விடுக்கும் வகையில் ‘எக்ஸ்’ தளத்தில்  பரப்பப்படுகிறது.

https://x.com/i/web/status/1884841532227776968

உண்மை என்ன?


பரப்பப்படும் புகைப்படத்தைக் கொண்டு 'Reverse Image Search’ முறையில் தேடுகையில், ‘THE STRAITS TIMES’ என்ற செய்தித்தளத்தில் 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் இதுபற்றி வெளியான செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, மிட்டாய் வடிவத்திலான இந்த போதைப்பொருள் பற்றி இணையத்தில் பரவும் தகவல்கள் எதையும் சிங்கப்பூரின் Central Narcotics Bureau (CNB) வெளியிடவில்லை என்றும் அதே நேரத்தில் அமெரிக்காவின் Florida பகுதியில் இதுபோன்ற மிட்டாய் வடிவத்திலான "Ecstasy" என்ற போதைப்பொருள் காரணமாக அப்பகுதியின் பதின்பருவத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. 



‘GEORGE HERALD’ என்ற செய்தித்தளத்தில் ஏப்ரல் 2017-ல் வெளியான செய்தியின் படி, தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கேப் டவுனின் தெற்கு பகுதியில் இதுபோன்ற மிட்டாய் வடிவத்தில் இருக்கும் போதைப்பொருள் விற்கப்பட்டதாகத் தெரியவருகிறது. 


மேலும், அக்டோபர் 2010-ல் ‘THE TIMES OF INDIA’ பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, மெத் என்று சொல்லப்படக்கூடிய மெத்தம்பேட்டமைன் என்ற போதைப் பொருள் ஸ்ட்ராபெர்ரி சுவையுடைய ’strawberry quick’ என்ற பெயருடன் மும்பை நகரத்தில் பள்ளிக் குழந்தைகளிடம் விற்கப்படுவதாகவும், அதனைக் குழந்தைகள் மிட்டாய் என நினைத்துச் சாப்பிட்டு அதற்கு அடிமையாகிவிடுவதாகவும் குறிப்பிடுகிறது. ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படும் அதே paragraph இந்த செய்தியில் சிறிய மாறுதலுடன் இருப்பதைக் காண்கிறோம். ஆனால், ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படும் அந்தப் புகைப்படம் இந்தச் செய்தியில் இடம்பெறவில்லை. 



The Print செய்தித்தளம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‘இது போன்ற ஸ்ட்ராபெர்ரி சுவையுடைய போதைப் பொருள் பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுவது வதந்தி’ என்று அருணாச்சல பிரதேச மாநிலத்தின் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ’போதைப்பொருள் பற்றிய இந்த இணைய புரளி (Internet Hoax) 2007ஆம் ஆண்டிலிருந்து இருப்பதாகவும், இதுபோன்று குழந்தைகளைக் குறிவைத்து ஸ்ட்ராபெர்ரி சுவையுடைய போதைப்பொருள் விற்கப்படுவதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று US Drug Enforcement Administration தெரிவித்துள்ளதாகவும்’ காவல் கண்காணிப்பாளர் ரோஹித் ராஜ்பீர் சிங் கூறுகிறார்.


இதிலிருந்து இதுபோன்ற மிட்டாய் சுவையில் இருக்கும் போதைப்பொருட்கள் பற்றிய செய்தி 2007ஆம் ஆண்டிலே வெளியாகியிருப்பதையும், 2017ஆம் ஆண்டில் இது வெவ்வேறு நாடுகளில் செய்தியாக வெளியாகி இருப்பதையும் காண்கிறோம். ஆனால் தற்போது இதுபோன்ற மிட்டாய் வடிவத்திலான போதைப் பொருட்கள் பற்றிய பிரச்சனை இருப்பதாகச் செய்திகள் ஏதும் இல்லை.


முடிவு:


இந்த பழைய செய்தியை வெவ்வேறு நாடுகளில் போதைப்பொருள் தொடர்பாக வெளியான புகைப்படத்துடன் இணைத்து தற்போது இதுபோன்ற போதைப்பொருள் சார்ந்த அச்சுறுத்தல் உள்ளதாகத் திரித்துப் பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.