யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின் போது, லுங்கியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று மக்களை இந்திய இராணுவத்தினர் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
பரவிய செய்தி
இந்த படம் 1971ல ஒரு பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவன்.. தன் நாட்டைச் சேர்ந்தவனையே... சோதனை செய்யும் முறை... இதுதான் எப்போதும் அவர்களின் சோதனை செய்யும் முறை... அதாவது உங்க பேர் தேவையில்லை... உங்க நாடு தேவையில்லை... உங்க ஜாதி தேவையில்லை... நீங்க நல்லவரா.. கெட்டவரா... பணக்காரரா... ஏழையா... எந்த எலவும் தேவையில்லை... ஒரே ஐடென்டி.. #Identity லுங்கிக்குள் இருப்பது தான்... நடுநிலைகள் இப்போது போலவே இருந்தால்... நீங்களும் ஒரு நாள் இப்படி சோதிக்கப்படலாம்....!!?

விரிவான விளக்கம்
காஷ்மீரில் உள்ள 'பஹல்காம்' என்னும் சுற்றுலாத்தளத்தில் கடந்த 22ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 28 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளில் ஆண்களை குறிவைத்து, அவர்கள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களா அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களா? என்று கேள்வி கேட்டு சுட்டதாக செய்திகளில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இராணுவ வீரர் ஒருவர் ஒரு ஆணின் லுங்கியை அவிழ்ந்து சோதனை செய்யும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பதிவிட்டு, ’பாகிஸ்தான் இராணுவத்தினர், ஒருவர் இந்துவா அல்லது முஸ்லிமா என்பதை கண்டுபிடிக்க அவர்கள் சுன்னத் செய்திருக்கிறார்களா என்று லுங்கியை அவிழ்ந்து சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்’ என்று சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தைக் கொண்டு ’Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியதில், ‘Dhaka Tribune’ செய்தித்தளத்தில் ‘1971 in Kishor Parekh’s eyes’ என்ற கட்டுரையில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிந்தது.

அந்த புகைப்படத்தின் கீழ், ‘லுங்கியில் ஆயுதங்கள் ஏதும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதா? என்று இந்திய இராணுவ வீரர் சோதிக்கிறார்’ என்று குறிப்பு எழுதப்பட்டிருந்தது. மேலும், அந்த கட்டுரையில், ‘கிஷோர் பரேக்’ என்னும் புகைப்படக் கலைஞரின் “Bangladesh- a Brutal Birth” என்னும் புகைப்பட புத்தகம் (photo book) பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

அப்புத்தகத்தில் இந்த புகைப்படம் இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது. அந்த புகைப்படத்தின் கீழ் அடிக்குறிப்பில், ‘பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின் போது பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுறுவலை தடுக்கும் வகையிலும், யாரேனும் லுங்கியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்ற வகையிலும் அங்குள்ள கிராம மக்களை இந்திய இராணுவத்தினர் சோதனை செய்வதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த படத்திலிருப்பது இந்திய இராணுவ வீரர் என்பதும், லுங்கியில் ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று அவர் சோதனை செய்கிறார் என்பதும் தெளிவாகிறது. இதனை தவறாக சித்திரித்து, பாகிஸ்தான் இராணுவத்தினர் ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை கண்டறிய அவர் சுன்னத் செய்திருக்கிறாரா? என்று சோதிப்பதாக தவறாக பரப்பப்படுகிறது.
முடிவு:
பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின் போது லுங்கியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று இந்திய இராணுவ வீரர்கள் சோதிக்கும் புகைப்படத்தை, சுன்னத் செய்யப்பட்டிருக்கிறதா என்று பாகிஸ்தான் இராணுவ வீரர் சோதனை நடத்துவதாக பாஜகவினரால் தவறாக சித்தரித்துப் பரப்பப்படுகிறது.