யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட Deep Fake வீடியோவாகும்.
பரவிய செய்தி
”நான் ஒரு முஸ்லிம், பாகிஸ்தானி அல்ல. நான் ஒரு முஸ்லிம், தீவிரவாதி அல்ல. இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதிகளை அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லிம் பெண் நான்” - சோபியா குரேஷி


விரிவான விளக்கம்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மே 7ஆம் தேதியன்று ‘Operation Sindoor’ என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியா. இந்த இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி பத்தரிகையாளர்கள் சந்திப்பில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் விளக்கமளித்தனர்.
பாஜகவைச் சேர்ந்த மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா ’Operation Sindoor’ குறித்து பேசும்போது, ”அவர்கள் (தீவிரவாதிகள்) நமது சசோதரிகளின் குங்குமத்தை அழித்தார்கள். அதற்கு பதிலடியாக அவர்களது சகோதரியை (சோபியா குரேஷி) அனுப்பி அவர்களை அழித்தோம்” என்று மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசினார்.
இந்நிலையில், சோபியா குரேஷி ”நான் ஒரு முஸ்லிம், பாகிஸ்தானி அல்ல. நான் ஒரு முஸ்லிம், தீவிரவாதி அல்ல. இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதிகளை அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லிம் பெண் நான்” என்று பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
நான் ஒரு முஸ்லிம்,
பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு முஸ்லிம்,
தீவிரவாதி அல்ல
இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதிகளை அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லிம் பெண் நான்,,
இப்படி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இந்த வீராங்கனைக்கு வந்தது கொடுமை🤦 pic.twitter.com/EM1HCylZlK
நான் ஒரு முஸ்லிம் ஆனால் பாகிஸ்தானி கிடையாது, நான் ஒரு முஸ்லிம் ஆனால் தீவிரவாதி கிடையாது,
பயங்கரவாதிகளுக்கு எந்த மதமும் கிடையாது,
நான் ஒரு முஸ்லிம் தீவிரவாதிகளை களையெடுக்க புறப்பட்டவள்.
பாரதத்தின் ராணுவ கர்னல்
வீரமங்கை சோபியா குரைஷி#OperationSindoor @BJP4TamilNadu… pic.twitter.com/IeT8fsJBuS
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘ANI News’ செய்தித் தொலைக்காட்சியின் யூடியூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் ‘Operation Sindoor’ பற்றி பத்தரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வீடியோ இது.

இந்த வீடியோவில், சோபியா குரேஷி பேசும் காட்சி பரப்பப்படும் வீடியோவுடன் ஒத்துப்போவதை காண்கிறோம். கருஞ்சாம்பல் நிற (Grey Color) Laptop, Mic Position ஆகியவையெல்லாம் ஒத்துப் போகிறது. பரப்பப்படும் வீடியோவில் Laptop-ல் ’Sofia Qureshi’ என்று எடிட் செய்து ஒட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து, பரப்பப்படும் காட்சி இந்த வீடியோவிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.
ஆனால், இந்த 24 நிமிடங்கள் நீள வீடியோவில் சோபியா குரேஷி எங்கும் தான் ’ஒரு முஸ்லிம் பெண்’ என்று சுயவிளக்கம் அளித்ததாக பதிவாகவில்லை. அவர் 'Operation Sindoor’ பற்றி மட்டுமே விளக்கமளிக்கிறார். தான் ஒரு முஸ்லிம் என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால், பரப்பப்படும் வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (AI’) உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கருதி, ‘Resemble AI’ என்னும் தளத்தில் சோதனை செய்தோம்.

முதலில், ‘ANI News’ யூடியூப் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவின் ‘ஆடியோ’வை பிரித்து சோதித்தோம். அந்த ‘ஆடியோ’ உண்மையானது என்று முடிவு வந்தது. மேலும், பரப்பப்படும் வீடியோவில் இருந்து ‘ஆடியோ’வை சோதித்தோம். அந்த ‘ஆடியோ’ போலியானது (Fake) என்று முடிவு வந்தது.
இதிலிருந்து, சோபியா குரேஷி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான Deep Fake வீடியோவை உருவாக்கியிருப்பது தெரியவருகிறது.
முடிவு:
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட Deep Fake வீடியோவை பயன்படுத்தி, சோபியா குரேஷி ‘தான் ஒரு முஸ்லிம்’ என்று சுயவிளக்கம் அளித்ததாக தவறாக பரப்பிவருகிறார்கள்.