யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் இல்லை என்றும், விசிக தலைவரான தொல். திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினைக்கு போகவில்லை என்றும் பேசியுள்ள ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் தவறானவை
பரவிய செய்தி
“இன்னைக்கு வர நீங்க அறிவாலத்துல பெரியார் போட்டோ வச்சது இல்ல” , “வேங்கைவயல் பிரச்னைக்கு ஏன் திருமாவளவன் போகவில்லை?” - தவெக கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா
விரிவான விளக்கம்
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் ஆர்ஜுனா பேசுகையில், அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் இல்லை என்றும், விசிக தலைவரான தொல். திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினைக்கு போகவில்லை என்றும் பேசியுள்ளார். இந்நிலையில் ஆதவ் ஆர்ஜுனாவாவின் இப்பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் இல்லையா?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பிப்ரவரி 08, 2025 அன்று திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள், இன்று (8.2.2025) காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்” என்று குறிப்பிட்டு அறிவாலத்தில் அவர் மாணவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன. அதில் அவர்களுக்கு பின்புறம் உள்ள சுவரில் பெரியாரின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
இதே போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் அரசியல் தலைவர்களுடன் இருக்கும் பல புகைப்படங்களிலும், அங்கு பெரியார் படம் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
வேங்கைவயல் பிரச்சினை குறித்து தொல். திருமாவளவன்:
விசிக தலைவரான தொல். திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினைக்கு போகவில்லை என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2023 பிப்ரவரி 4 அன்று வேங்கைவயல் கிராமத்தில் மக்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவிப்பதையும், அங்கே தனது கட்சியின் சார்பில் மருத்துவ முகாமை தொடங்கி வைப்பதையும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ மூலம் அறிய முடிகிறது.
மேலும் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காதது ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்திருப்பது குறித்து “இந்து தமிழ் திசை” ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதே போன்று, வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்டது குறித்த வழக்கில், பட்டியலினத்தவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க கூடாது என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருப்பதையும் பல செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
மேலும் படிக்க: வேங்கைவயல் தொடர்பான கேள்விக்கு திருமாவளவன் கோபமாக பதிலளித்ததாக பரவும் பொய்!
முடிவு:
நம் தேடலில், அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் இல்லை என்றும், விசிக தலைவரான தொல். திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினைக்கு போகவில்லை என்றும் பேசியுள்ள ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.