யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தேசியக்கொடி வைக்கக்கூடாது என முஸ்லிம் நபர் சண்டையிடுவதாகப் பரவும் விழிப்புணர்வு வீடியோ !
பரவிய செய்தி
தேசிய கொடி இவனுங்களுக்கு பிடிக்காதுன்னா
இவனுங்க
ஏன் இந்தியாவில் இருக்கணும்
பாக்கிஸ்தான் பங்களாதேஷ்க்கு
அனுப்பி விடலாமே

விரிவான விளக்கம்
ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஒரு முஸ்லிம் நபர் ஒருவரும் அவரது தாயாரும் தங்களது கடையில் தேசியக்கொடியை வைக்கக்கூடாது என்று சிலரிடம் சண்டையிடுவது போன்ற 0:29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரப்பப்படுகிறது.
🇮🇳 தேசிய கொடி இவனுங்களுக்கு பிடிக்காதுன்னா
— 🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 (@VCankam) August 19, 2024
இவனுங்க
ஏன் இந்தியாவில் இருக்கணும்🤔
பாக்கிஸ்தான் பங்களாதேஷ்க்கு
அனுப்பி விடலாமே 🤔🤔@Indumakalktchi @BJP4Himachal @Salwan_Momika1 @realDonaldTrump @HinduVoice_in @hindu8789 @polimernews @friendsofrss @RSSorg pic.twitter.com/woiOZqlBEY
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை வைத்து தேடிப்பார்த்ததில் (Google Reverse Image Search) இது, கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது.
Ritik Kataria என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று பதிவிடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
இந்த வீடியோவில் முஸ்லிம் நபர் ஒருவர் தேசியக்கொடியை கம்பத்தில் கட்ட வேண்டாம் எனவும் தேசியக்கொடியை வைக்கவேண்டிய இடம் இது அல்ல மேலேதான் வைக்கவேண்டும், தானும் இந்தியன்தான் என்றும் சொல்வதை பார்க்கமுடிகிறது.
வீடியோவின் இறுதியில் அனைவரும் ஒன்றாகக் கட்டிப்பிடித்து ‘மன்னிக்கவும்’ ‘ஜெய் ஹிந்த்’ எனச் சொல்வதை கேட்கமுடிகிறது. இந்த யூடியூப் பக்கத்தை ஆய்வுசெய்து பார்த்ததில் இதுபோலவே பல வீடியோக்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும் அப்பக்கத்தில் இவர் பெயர் ரித்திக் கட்டாரியா, ஹரியானா காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக உள்ள அமர் கட்டாரியாவின் மகன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
எனவே, இதுதொடர்பாக யூடர்ன் தரப்பிலிருந்து ரித்திக் கட்டாரியாவை தொடர்புகொண்டு பேசுகையில், இது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி உறுதிப்படுத்தினார்.
முடிவு :
நம் தேடலில் , முஸ்லிம் ஒருவர் தேசியக்கொடியை இங்கே வைக்கக்கூடாது என்பதாக பரவிய செய்தி உண்மையானது அல்ல. இவை விழிப்புணர்வு நோக்கத்துக்காக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகத்தெரிகிறது.