யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமா கேள்வி கேளுங்கள். பதில் சொல்றேன்." - என்றே அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி இருக்கிறார். கண்டவனுக்கு என்று கூறியதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
"கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" தவெக தலைவர் விஜயை ஒருமையில் திட்டிய அமைச்சர்
@TRBRajaa

விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி செப்டம்பர் 13-ந்தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து செப்டம்பர் 20 அன்று அவர் நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அப்போது விஜய், "சிஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. " என்று பேசியிருந்தார்.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிடம் கேட்டதற்கு, "கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
"கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" தவெக தலைவர் விஜயை ஒருமையில் திட்டிய அமைச்சர் @TRBRajaa https://t.co/L2Gf8hQCS4 pic.twitter.com/39ypFvMOoi
உண்மை என்ன?
முதலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்த வீடியோவை தேடிப் பார்த்தோம். அப்போது பாலிமர் செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ”விஜய் குற்றச்சாட்டு குறித்த கேள்வி.. சொல்ல மறுத்த அமைச்சர் TRB.ராஜா..!!” என்ற தலைப்பில் செப்டம்பர் 21, 2025 அன்று முழு பேட்டியும் பதிவாகியிருந்தது. அதில் 0.10வது விநாடியில் ’வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா’ என்று விஜய் பேசியுள்ளார் என்றும், இதை பற்றி உங்கள் கருத்து என்றும் செய்தியாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா "சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமா கேள்வி கேளுங்கள்” என்றே பதிலளித்திருந்தார்.
இது குறித்து மேலும் தேடிய போது,தினத்தந்தி ஊடகத்தில் ”சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது- டி.ஆர்.பி.ராஜா” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பி. ராஜா, ”சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்ததாக பதிவாகியிருந்தது.

முடிவு:
எனவே, ”சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமா கேள்வி கேளுங்கள். பதில் சொல்றேன்." - என்றே அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி இருக்கிறார். கண்டவனுக்கு என்று கூறியதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.