யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோவை உண்மையில் நடந்த சம்பவம் எனத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு இருக்கானுங்க. உத்திர பிரதேசத்தை பார்த்து உலகமே வியக்கிறது...

விரிவான விளக்கம்
உத்தரப் பிரதேசத்தில் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், ஜோசியக்கார் சொன்னதற்கு இணங்க மனைவியைச் சாக்கடையில் ஒரு வாரம் படுக்க வைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
குழந்தை இல்லாத முஸ்லிம் கணவர் இப்படிச் செய்ததாக இதே வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. அப்போதே இது குறித்த உண்மையை யூடர்ன் ஆங்கில இணையதளத்தில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
குழந்தை பேறுக்காக ஜோசியரின் பேச்சைக் கேட்டு மனைவியைச் சாக்கடையில் படுக்க வைத்ததாகப் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடினோம். இதன் முழுமையான வீடியோ, “Ankur Jatuskaran” என்ற யூடியூப் பக்கத்தில் 2023, மார்ச் 31ம் தேதி பதிவிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.
முழுமையான வீடியோவின் 30வது வினாடியில் Disclaimer ஒன்று காட்டப்படுகிறது. அதில், ‘இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களது பேஸ்புக் பக்கமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே வீடியோ, அந்த பேஸ்புக் பக்கத்தில் 2022, டிசம்பர் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் மேற்கண்ட Disclaimer உள்ளது.

இப்படித் திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோவை உண்மையில் நடந்த சம்பவம் போல் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோவை உண்மையில் நடந்த சம்பவம் எனத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.