யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்து விடுவார்கள் என அசாதுதீன் ஒவைசி கூறியதாகப் பரவும் பொய்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியா - பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள் என AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூறியதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இதே தலைப்பில் ’Kashmir Observer’ என்ற தளத்தில் 2014, செப்டம்பர் 1ஆம் தேதி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?
பரவக்கூடிய படத்தில் உள்ள தலைப்பைக் கொண்டு இணையத்தில் தேடியதில், இதுதொடர்பாக ‘Headlines Today’ ஊடகத்துக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அளித்த நேர்காணலில் அசாதுதீன் ஒவைசி விளக்கம் அளித்துள்ளார். தற்போது பரவும் தகவல் குறித்து அந்நேர்காணலில் ஒவைசியிடம் ஊடகவியலாளர் கரண் தாப்பர் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு, தான் அப்படி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஒவைசி பதில் அளித்துள்ளார்.
மேலும் 2014, செப்டம்பர் 2ஆம் தேதியே ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில், இதுதொடர்பாக தனது வழக்கறிஞர் ‘Jammu observer’ ஊடகத்துக்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்புவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றிலிருந்து அசாதுதீன் ஒவைசி கூறாத கருத்தை சுமார் 10 ஆண்டுகளாக வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்து விடுவார்கள் என அசாதுதீன் ஒவைசி கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. 2014ஆம் ஆண்டு இத்தகவல் பரவிய போதே அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
