யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உச்சநீதிமன்றத்தில் ‘தக் லைஃப்’ தொடர்பான வழக்கு விசாரணையில் கமல் தரப்பு அசிங்கப்பட்டது என்றும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் கூறி பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவி வருகின்றன.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் பேசியிருந்த நிலையில், அது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையானது. கர்நாடக முதலமைச்சர் முதல் பல்வேறு கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல் இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் பல அமைப்பினர் எச்சரிக்கைகள் விடுத்தனர். ஆனால் கமல் மன்னிப்பு கேட்காத நிலையில், தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் கமல் தரப்பு அசிங்கப்பட்டது என்றும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் கூறி பல செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன.
உச்சநீதிமன்றத்தில் அசிங்கப்பட்ட கமலஹாசன் தரப்பு
படத்தை கர்நாடகத்தில் தியேட்டர்களில் வெளியிட்டால் கொளுத்துவோம் என்று சொல்கிறார்கள் - கமல் வக்கீல்.
சரி , அப்போ தீ அணைப்பு சாதனங்களை வைத்துக்கொள்ளுங்கள் - உச்சநீதிமன்றம்
தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - கமல் வக்கீல்
அதை…
மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறி தினமணி, நக்கீரன் உள்ளிட்ட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நீதிபதி பி.கே. மிஸ்ரா ஆரம்பத்தில் மனுவை ஏற்க மறுத்து, மனுதாரரை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டது உண்மையே என்பதை அறிய முடிந்தது. ஆனால் அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, "படத்தின் தயாரிப்பாளர் உண்மையில் உயர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், ஆனால் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை" என்றும் கூறினர். இந்நிலையில் இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 13, 2025) அன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை. மேலும் கமல்ஹாசன் தரப்பை அசிங்கப்படுத்திய உச்சநீதிமன்றம் என்று கூறி பரவி வரும் செய்திகளும் திரிக்கப்பட்டவையே என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் அதை உயர்நீதிமன்றத்தில் போய் கேளுங்கள், எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கமல்ஹாசன் தரப்பை அசிங்கப்படுத்திய உச்சநீதிமன்றம் என்று கூறி பரவி வரும் செய்திகள் திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.