யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடுரோட்டில் இருக்கும் குழந்தையை மயில் ஒன்று கார் விபத்திலிருந்து காப்பாற்றுவதைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் இந்த வீடியோ போலியானது.
பரவிய செய்தி
நடுரோட்டில் குழந்தை இருப்பதைப் பார்த்து குழந்தையை பாதுகாத்து பத்திரமாக ஓரத்தில் கொண்டு சேர்க்கும் மயில். வியக்க வைக்கும் அதிசியம். மயில் வாகனனே போற்றி ஓம் முருகா.
விரிவான விளக்கம்
நடுரோட்டில் இருக்கும் குழந்தையை மயில் ஒன்று கார் விபத்திலிருந்து காப்பாற்றுவது போன்ற 53 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் இது உண்மையான வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
வீடியோவின் பல காட்சிகள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளுடன் காணப் படுகின்றன. சரியாக வீடியோவின் 37வது வினாடியில் குழந்தையின் தலையிலும், மயிலுக்கு இருப்பது போன்றே மயிலிறகு கொண்டை காணப்படுகிறது.

இதே போன்று குழந்தையின் கால்களில், சரியாக வீடியோவின் 12 வது வினாடியில் காலில் சாக்ஸ் இருப்பது போன்றும், 25 வது வினாடியில் காலில் சாக்ஸ் இல்லாதது போன்றும் உள்ளது. மேலும் வீடியோவின் பின்புறம் உள்ள வீடுகள் பல காட்சிகளில் இயல்புக்கு மாறாக நகர்கின்றன.
எனவே இது AI வீடியோ தானா என்பதை உறுதிபடுத்த wasitai இணையதளத்தில் வீடியோவின் காட்சிகளை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். அப்போது இது “இந்தப் படம் அல்லது இதன் குறிப்பிடத்தக்க பகுதி, AI ஆல் உருவாக்கப்பட்டது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்” என்ற முடிவைக் காட்டியது.
எனவே பரவி வரும் வீடியோ AI-ஆல் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், நடுரோட்டில் இருக்கும் குழந்தையை மயில் ஒன்று கார் விபத்திலிருந்து காப்பாற்றுவதைப் பாருங்கள் என்று பரவி வரும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது.