யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2018-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் வேலூரைச் சேர்ந்த கபடி வீராங்கனை பேசியபோது ஒளிபரப்பப்பட்ட வீடியோ இது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
250 கோடி கார் ரேஸ் எல்லாம் தமிழகத்தின் தலைவிதி
தேசிய அளவில் கபடி விளையாடும் ஏழை வீராங்கனைக்கு ஒழுங்கா சாப்பாடு கூட கொடுக்க துப்பில்ல
இந்த லட்சன கூந்தல்ல தமிழக விளையாட்டு துறையை உலக அளவில் தூக்கி நிறுத்துவாராம்
துறை அமைச்சருக்கு ஓய்வு வேற

விரிவான விளக்கம்
தேசிய அளவில் கபடி விளையாடும் வீராங்கனை மூன்று வேளை உணவில்லாமல் வறுமையில் வாடுகிறார் என்றும், கபடி விளையாடும் ஏழை வீராங்கனைக்கு சரியான உணவை கூட தமிழக விளையாட்டு துறையால் அளிக்கமுடியவில்லை என்று கூறியும் 46 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர்.
250 கோடி கார் ரேஸ் எல்லாம் தமிழகத்தின் தலைவிதி
தேசிய அளவில் கபடி விளையாடும் ஏழை வீராங்கனைக்கு ஒழுங்கா சாப்பாடு கூட கொடுக்க துப்பில்ல
இந்த லட்சன கூந்தல்ல தமிழக விளையாட்டு துறையை உலக அளவில் தூக்கி நிறுத்துவாராம்
துறை அமைச்சருக்கு ஓய்வு வேற🤦 pic.twitter.com/LNRzvyf6KN
உண்மை என்ன?
பரவி வரும் காணொளி, நீயா நானா நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது. இதையடுத்து அந்த நிகழ்ச்சி குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது நவம்பர் 11, 2018 அன்று தேசிய விளையாட்டு ”வீராங்கனைகள் VS ஏழை அப்பாக்கள்” என்ற தலைப்பில் நீயா நானாவில் இந்த நிகழ்ச்சி நடந்தது தெரியவந்தது.
அதே போல் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ காணொளி ஒன்று Vijay Television யூடியூப் பக்கத்தில் நவம்பர் 9, 2018 அன்று பதிவிடப்பட்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது. அதில் மூன்று வேலை உணவு கிடைத்தாலே உடல் எடையைப் பராமரிக்க முடியும் என்று, பரவி வரும் காணொளியில் உள்ள பெண் கூறுவது இடம்பெற்றிருந்தது.
இது குறித்து மேலும் தேடிப் பார்த்த போது, Hindu Tamil ஊடகத்தில் ”அறம் பழகு: கூலி வேலை செய்து கபடி பயிற்சியளிக்கும் கோச்; சாதிக்கும் ஏழை வீராங்கனைகள் 7 பேரின் படிப்புக்கு உதவுங்கள்!” என்ற தலைப்பில் ஜூலை 17, 2019 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் வேலூரில் கூலி வேலை செய்து தங்களுக்குப் பயிற்சியளிக்கும் கோச்சுக்கு வெற்றிகளைப் பரிசளிக்கும் 7 மாணவிகள் படிக்க வசதியில்லாமல், கல்லூரியில் சேரக் காத்திருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தில், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவியும் இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும் அவர்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண், வங்கிக் கணக்கு போன்றவற்றையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி 2018ல் வெளியானது. அன்றைய காலக்கட்டத்தில் அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், கடந்த 2018-ல் தனியார் தொலைக்காட்சியில் வேலூரைச் சேர்ந்த கபடி வீராங்கனை பேசியபோது ஒளிபரப்பப்பட்ட வீடியோ இது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.