யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நேபாளத்தில் கடந்த 2023-ல் விமான விபத்து ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது நடைபெற்ற அகமதாபாத் விமான விபத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்திய நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்ற ஒரு பயணி மட்டும் காயங்களுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட பேஸ்புக் நேரடி வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், விமானத்தில் இருக்கும் பயணிகளை ஒருவர் நேரடியாக வீடியோ எடுப்பதையும், அப்போது விமானம் திடீரென்று வெடிப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது அகமதாபாத் விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Portal Do Holanda” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த 2023 ஜனவரியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “நேபாளத்தில் கடந்த 2023 ஜனவரி 15 அன்று விமான விபத்து ஏற்படுவதற்கு முந்தைய இறுதி தருணங்களை ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த விபத்தில் இதுவரை 67 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “Portal Amazonas Digital” இணையப்பக்கத்திலும், பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு இது நேபாள விமான விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் “Dailystar” இணையப் பக்கத்தில் நேபாளத்தில் கடந்த 2023 ஜனவரியில் ஏற்பட்ட விமான விபத்தை உறுதி செய்யும் வண்ணம் விபத்தின் காட்சிகளை புகைப்படங்களாக பதிவு செய்திருந்தனர்.
இதன் மூலம் நேபாளத்தில் கடந்த 2023-ல் விமான விபத்து ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது நடைபெற்ற அகமதாபாத் விமான விபத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், அகமதாபாத் விமான விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட பேஸ்புக் நேரடி வீடியோ என்று பரவும் வீடியோ, 2023-இல் ஏற்பட்ட நேபாள விமான விபத்தோடு தொடர்புடையது என்பது உறுதியாகிறது.
