யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“அ.தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத்” என்று குறிப்பிட்டு பாலிமர் செய்தி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து திமுக ஐடி விங் என்று அதிமுகவினர் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஆப்பிரிக்க இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த காவல்துறையினர், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் இவ்வழக்கில் தொடர்புடையவர் என்று குறிப்பிடப்பட்ட பாலிமர் நியூஸின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் அதிமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
போதை பொருள் கடத்திய திமுக it wing முன்னாள் நிர்வாகி 🤣 pic.twitter.com/LNSBUfaRri
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ்கார்டு குறித்து ஆய்வு செய்ததில், இது குறித்து பாலிமர் நியூஸ் ஜூன் 24 அன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு கிடைத்தது.
அதில், “போதைப்பொருளுக்கு அடிமையானது எப்படி? தீங்கிரை என்ற படத்தில் தான் நடித்ததற்காக ரூ.10 லட்சத்தை, தயாரிப்பாளரான அ.தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் பாக்கி வைத்திருந்ததாக ஸ்ரீகாந்த் வாக்குமூலம். தனக்கு தரவேண்டிய ரூ.10 லட்சம் பாக்கிக்காக, 3 முறை தனக்கு பிரசாத் கொக்கைன் வாங்கி கொடுத்ததாகவும், 4ஆம் முறை தானே கேட்கும் அளவிற்கு அடிமையானதாகவும் ஸ்ரீகாந்த் வாக்குமூலம்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
#JUSTIN || போதைப்பொருளுக்கு அடிமையானது எப்படி? - ஸ்ரீகாந்த் வாக்குமூலம் | #Srikanth | #Actor | #Arrest | #DrugCase | #PolimerNews pic.twitter.com/qABi7IOZ4v
இதன் மூலம், “அ.தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத்” என்று குறிப்பிட்டு பாலிமர் செய்தி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து திமுக ஐடி விங் என்று அதிமுகவினர் பலரும் தவறாகப் பரப்புகின்றனர் என்பது உறுதியாகிறது.
இது குறித்து மற்ற செய்திகளிலும் ஆய்வு செய்தோம். அதன்படி, அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் இவரிடம் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதாகவும் பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், “அ.தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத்” என்று பாலிமர் நியூஸ் கார்டில் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்ததை, திமுக என்று மாற்றி பலரும் தவறாகப் பரப்பி வருவதை உறுதி செய்ய முடிகிறது.