யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2025 அக்டோபரில் அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘திருமணப் புகைப்படம், காணொளித் தொகுப்பு’ பயிற்சியின்போதே கட்டணமாக ரூ.8000 பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது நடைபெறும் பயிற்சிக்கு திடீரென கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
TVK அரசு மக்களை ஏமாற்றுகிறது! முன்னாள் CM ஸ்டாலின் காலத்தில் திருமண புகைப்படம் & வீடியோ எடிட்டிங் பயிற்சி முழு இலவசம். ஆனால் இப்போ TVK - விஜய் CM காலத்தில் அதே பயிற்சிக்கு ரூ.8000 கட்டணம் வாங்குகிறார்கள்!

விரிவான விளக்கம்
திமுக ஆட்சியில், அரசு சார்பாக நடத்தப்படும் ‘திருமணப் புகைப்படம், காணொளித் தொகுப்பு பயிற்சி' (Wedding Photography and Video Editing Training) இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் இதற்கு ரூ.8000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது எனக் கூறி சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
கடந்த @mkstalin ஆட்சியில் இலவசமா கொடுக்கப்பட்ட பயிற்சி இந்த ஆட்சியில் 8000 ரூபாய் கட்டணம் !!
விளிம்பு நிலை மக்கள் பணம் கட்டி படிக்க முடியாத மக்களுக்கு பயன்படுவதற்கு உருவாக்கப்பட்ட துறையில் கட்டணம் வசூல் செய்வது மக்களுக்கு செய்யும் துரோகம்..#மாற்றம் அல்ல இது ஏமாற்றம்#Tvkfails pic.twitter.com/zAN8sXoyaY
உண்மை என்ன?
திமுக ஆட்சியில், அரசு சார்பாக நடத்தப்படும் ‘திருமணப் புகைப்படம், காணொளித் தொகுப்பு பயிற்சி' இலவசமாக வழங்கப்பட்டதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அக்டோபர் 06, 2025 அன்று ‘திருமணப் புகைப்படம், காணொளித் தொகுப்பு பயிற்சி' குறித்து வெளியிட்டுருந்த அறிவிப்பு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பயிற்சியின்போது பதிவுக் கட்டணம் ரூ.8000 செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து கடந்த ஆட்சியிலும் ரூ.8000 பெறப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதே போல் மே 27, 2023 அன்று அரசு சார்பில் நடத்தப்பட்ட சரக்கு மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த ஒரு நாள் இணையவழி கருத்தரங்கு ரூ.2000 பதிவு கட்டணம் பெறப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுருந்த அறிவிப்பு மூலம் அறியமுடிந்தது.
EDII-TN is conducting One Day Webinar on Logistics and Supply Chain Management. STEP IN AND GET NURTURED in your Logistic business pic.twitter.com/VJcHrPW5pd
மேலும் பிப்ரவரி 2024ல் அரசு சார்பில் நடத்தப்பட்ட தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கும் ரூ.15,000 பதிவு கட்டணமாக பெறப்பட்டுள்ளது.
முடிவு:
எனவே, திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட திருமணப் புகைப்படம், காணொளித் தொகுப்பு பயிற்சியின்போதே கட்டணமாக ரூ.8000 பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது நடைபெறும் பயிற்சிக்கு திடீரென கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.