YouTurn

தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீது ரூ.54 வரி வசூலிப்பதாக பாஜகவினர் பரப்பும் பொய்!

தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீது ரூ.54 வரி வசூலிப்பதாக பாஜகவினர் பரப்பும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மத்திய அரசு வரி ரூ.16, தமிழக அரசு வரி ரூ.54; பெட்ரோல் பங்க்ல போர்டு வைக்க தமிழக அரசுக்கு தைரியம் இருக்கா? - பாஜக KP..ராமலிங்கம் கேள்வி 


X link | Archive link

விரிவான விளக்கம்

பெட்ரோல் மீது ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு விதிக்கும் வரி குறித்து பாஜக-வை சேர்ந்த K.P.ராமலிங்கம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 






அந்த வீடியோவில் “இன்றைக்குப் பெங்களூருக்குச் செல்லுங்கள். சென்னையில் என்ன விலை, பெங்களூரில் என்ன விலை (பெட்ரோல்). இன்னைக்கு 10 ரூபாய் குறைவு. உங்களால் ஏன் குறைக்க முடியவில்லை. நீங்க GST-க்குள் வாருங்கள் இன்னும் குறையப் போகிறது. முழுக்க மத்திய அரசிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் (ஒன்றிய அரசு) போடுவது 16 ரூபாய் வரி, நீங்கள் (தமிழ்நாடு அரசு) போடுவது 54 ரூபாய் வரி. ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களில் மத்திய அரசின் வரி எவ்வளவு, மாநில அரசின் வரி எவ்வளவு என போர்டு வையுங்கள். வைக்கத் தமிழ்நாடு அரசுக்குத் தைரியம் உள்ளதா?” எனப் பேசியுள்ளார்.



Archive link

உண்மை என்ன?

இந்த தகவலை பாஜக-வை சேர்ந்த K.P.ராமலிங்கம் 2022, ஏப்ரல் மாதம் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அதன் முழு வீடியோ யூடியூபில் உள்ளது. பெட்ரோல் மீது ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு வரி வசூலிப்பது தொடர்பாக 2022ம் ஆண்டு சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அப்போதே அது பற்றி விரிவான கட்டுரை ஒன்று யூடர்னில் வெளியிடப்பட்டிருந்தது



பெட்ரோல் மீது வரி கணக்கீடு : 

பெட்ரோலின் அடிப்படை விலை மீது சரக்குக் கட்டணம் (சரக்குக் கப்பல்கள் வரும்போது செலுத்தப்படும் வரி), ஒன்றிய அரசின் கலால் வரி  ஆகியவை சேர்க்கப்பட்ட பிறகு மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி (VAT), டீலர் கமிஷன் சேர்க்கப்படுகிறது. 

[caption id="attachment_52325" align="aligncenter" width="700"] 2017[/caption]

தமிழ்நாடு அரசு 2017ம் ஆண்டு  பெட்ரோல் மீதிருந்த மதிப்புக் கூட்டு வரியை 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்தது. பின்னர் 2020ம் ஆண்டு 34 சதவீதமாக இருந்ததை 15% + ரூ.13.02 என்று மாற்றியது. இந்த இரண்டு மாற்றங்களும் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 

[caption id="attachment_52326" align="aligncenter" width="699"] 2020[/caption]

பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் 2021, ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான VAT வரி 3 ரூபாய் குறைத்த காரணத்தினால், 15% + 13.02 ரூபாயாக இருந்த வரியை 13% + ரூ.11.52 குறைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் பிறகு தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை அதிகரிக்கவோ குறைக்கவோ இல்லை.



K.P.ராமலிங்கம் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேசியபோது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.110.85 ஆக இருந்துள்ளது. அப்போது பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.56.70. கலால் வரி, செஸ் உட்பட ஒன்றிய அரசு வசூலிக்கும் வரி ரூ.27.90. சரக்குக் கட்டணம் ரூ.0.15. தமிழ்நாடு அரசின் மதிப்புக் கூட்டு வரி ரூ.22.54. டீலருக்கான கமிஷன் ரூ.3.56. இவை எல்லாம் சேர்த்துத்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கு விற்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் பார்த்தால் 2022, ஏப்ரல் மாதம் பெட்ரோல் மீது ஒன்றிய அரசு விதித்த வரி ரூ.27.90. அதேபோல் தமிழ்நாடு அரசின் வரி ரூ.22.54. தமிழ்நாடு அரசைக் காட்டிலும் சுமார் 5.36 ரூபாய் ஒன்றிய அரசு அதிகமாக வரி வசூலித்துள்ளது. இதிலிருந்து K.P.ராமலிங்கம் சொன்ன தகவல் தவறானது என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

தற்போது பெட்ரோல் மீதான வரி : 

தற்போது பெட்ரோலின் அடிப்படை விலை, ஒன்றிய அரசின் வரி, டீலரின் கமிஷன் ஆகியவை எவ்வளவு என்பதை 2024, பிப்ரவரி 1ம் தேதி டெல்லி பெட்ரோல் தொடர்பான தரவிலிருந்து பெற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் மதிப்புக் கூட்டு வரியைக் கணக்கிட்டோம். 
பெட்ரோலின் அடிப்படை விலை    ரூ.57.28

கலால் வரி, செஸ் உட்பட              ரூ.19.90

TN மதிப்புக் கூட்டு வரி                   ரூ.21.55   (ரூ.10.03 (13%) + ரூ.11.52)  

(57.28 + 19.90 = 77.18

77.18 x 13/100 = ரூ.10.03)

டீலர் கமிஷன்                                   ரூ.3.83

மொத்தம்                                           ரூ.102.56

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.102.60-க்கு விற்கப்படுகிறது. 

ஒன்றிய அரசு கடந்த 2022, மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாய் குறைத்தது. இதன் அடிப்படையில் ரூ.27.90 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி ரூ.19.90 ஆகக் குறைந்துள்ளது. 



ஒன்றிய அரசு வரியைக் குறைத்துவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு 2021ம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல் மீது எவ்வித வரி குறைப்பும் செய்யவில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. தமிழ்நாடு நேரடியாக வரியைக் குறைக்கவில்லை என்றாலும் ஒன்றிய அரசு கலால் வரியைக் குறைத்ததின் விளைவாகத் தமிழ்நாடு அரசின் மதிப்புக் கூட்டு வரியும் (VAT) குறைந்துள்ளது. 

ஒன்றிய அரசு கலால் வரியைக் குறைப்பதற்கு முன்னர் 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசின் பெட்ரோல் மீதான VAT வரி ரூ.22.54. பிறகு 2022 மே மாதம் ஒன்றிய அரசு கலால் வரியைக் குறைத்ததின் விளைவாகத் தானாகவே சுமார் ஒரு ரூபாய் குறைந்து தற்போது ரூ.21.55 ஆக உள்ளது. 

இந்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில், தற்போது பெட்ரோல் மீது ஒன்றிய அரசு ரூ.19.90, தமிழ்நாடு அரசு ரூ.21.55-ம் வரியாக வசூலிக்கிறது. ஆனால், K.P.ராமலிங்கம் பேசிய 2022 கால கட்டத்தில் ஒன்றிய அரசுதான் பெட்ரோல் மீது அதிக வரி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாடு அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.54 வரி வசூலிப்பதாக பாஜகவின் K.P.ராமலிங்கம் பேசிய தகவல் தவறானது. அவர் பேசிய 2022 ஏப்ரல் மாதம் ஒன்றிய அரசு ரூ.27.90, தமிழ்நாடு அரசு ரூ.22.54-ம் பெட்ரோல் மீது வரி வசூலித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு ரூ.19.90, தமிழ்நாடு அரசு ரூ.21.55-ம் வரியாக வசூலிக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க