YouTurn

மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்ததா திமுக? உண்மை என்ன?

மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்ததா திமுக?  உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய செய்தியாகும். அப்போது அதிமுக தான் ஆட்சியிலிருந்தது.

பரவிய செய்தி

இவர்களுக்கு தியாகி பட்டம் எப்போ தரப்போகுது நம்ம திராவிட மாடல் அரசு.

Melavalavu murder

X Link | Archived Link

விரிவான விளக்கம்

மேலவளவு பஞ்சாயத்து தனி தொகுதியில் போட்டியிட்டு பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றிபெற்றார். இதனால், ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் 1997, ஜூன் 30 அன்று அவரை கொடூரமாக படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


இதில், மதுரை சிறையிலிருந்தவர்கள் 3 பேர் ஏற்கனவே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஒருவர், உடல்நலம் காரணமாகச் சிறையிலே உயிரிழந்தார். அதன்பின்னர், சிறையிலிருந்த 13 பேரை, பொது மன்னிப்பு அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு அரசு விடுதலை செய்தது.


இதனைக் கொண்டு, மேலவளவு கொலையாளிகள் 13 பேரை திமுக அரசு தான் விடுதலை செய்தது என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


மேலவளவு கொலையாளிகள் விடுதலை குறித்து இணையத்தில் தேடிய போது, பல்வேறு செய்திகள் காணக்கிடைத்தது.


இதில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி 'தினகரன்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின் படி, 'இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், மதுரை சிறையில் இருந்த இவர்களில் 3 பேர் ஏற்கனவே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாகவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 'எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு, பத்தாண்டுகள் கழித்த சிறைவாசிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் சிறையில் இருந்த ராமர் உள்பட 13 பேர் விடுதலை செய்யப்படுவதாக' குறிப்பிடப்பட்டுள்ளது.



BBC தமிழ் செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, '17 பேரில் ஒருவர் உடல்நலம் காரணமாக உயிரிழந்தாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நன்னடத்தையின் அடிப்படையில், சிறையில் இருந்த 13 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும்' குறிப்பிடுகிறது.



இது தொடர்பாக 'தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' அமைப்பினர் விடுத்த அறிக்கையை The Indian Express (IE தமிழ்) மேற்கோள் காட்டியுள்ளது. அதில், "இவ்வழக்கின் குற்றவாளிகள் 13 பேர், நவம்பர் 9ம் தேதி எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொல்லான் (பெரிய புள்ளான்) சட்டமன்றத்தில் மேலவளவு குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கை வைத்த நாளில் இருந்து தமிழக அரசு குற்றவாளிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


melavalavu murder


மேற்குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி, மேலவளவு கொலையாளிகள் 13 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது அதிமுக அரசு தான் என்பது உறுதியாகிறது. திமுக அரசு "தான்" மேலவளவு கொலையாளிகளை விடுதலை "செய்தது" என்று பரப்பப்படும் தகவல் தவறானது.


முடிவு:


மேலவளவு கொலையாளிகள் அதிமுக ஆட்சியின் போது 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை திமுக அரசு விடுதலை செய்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.