காலநிலை மாற்றத்தால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! தரவுகள் கூறுவதென்ன?
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை, ஏன்? காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை ஆண்களைவிட பெண்களே அதிகம் அனுபவிக்கிறார்களா? ஓர் ஆழமான பார்வை!
1901-2018 காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்தியாவின் சராசரி வெப்பநிலை சுமார் 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று 1950-2015 காலகட்டத்தில், இந்தியாவில் தினசரி மழைப்பொழிவின் அளவு சுமார் 75% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாகவே அதீத மழை, வெள்ளம், வறட்சி, பனி உருகுதல், நிலத்தடி நீர் பற்றாக்குறை போன்ற நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழலில், சமீபத்திய ஆய்வு ஒன்று இத்தகைய காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாக பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது. அந்த ஆய்வு குறித்த தரவுகளை இங்கே தெளிவாகக் காணலாம்.
ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) இணைந்து சமீபத்தில் “காலநிலை மாற்றமானது வேளாண் சூழலியல் மண்டலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்துகிறது“ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டது.
அதன்படி நீர்-வானிலை தொடர்பான பேரழிவுகளான (hydro-meteorological disasters) சூறாவளிகள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றால் மொத்தமுள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 27 மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன. இதே போன்று நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு மண்டலங்கள் கடுமையான வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் அதே வேளையில், மேற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன.
இந்தியாவின் மழைப்பொழிவும் ஒழுங்கற்றதாகிவிட்டன. அதாவது அதிக மழைப்பொழிவு இருக்கும் அதே வேளையில், குறைவான நாட்களிலேயே மழை பெய்கின்றன (more precipitation but lesser number of rainy days). மேலும் 2013-2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் 29% நிலப்பரப்பு, ஓவ்வொரு ஆண்டிலும் 3 மாதங்களுக்கும் மேலான கடுமையான வறட்சியை அனுபவித்து வருகிறது.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே!
இந்நிலையில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாவதாக அறிக்கை கூறுகிறது. அதாவது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளுக்கு, ஆண்களின் இறப்புகளைக் காட்டிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்புகள் 14 மடங்கு அதிகமாக உள்ளன.
குறிப்பாக பெண்களுக்கு, அதிகரித்து வரும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள், வேலை சுமைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் (uncertainties) ஆகியவை உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளையும் பாதிக்கின்றன.
2030 முதல் 2050 வரை உலகளவில் பெண்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் ஆண்டுக்கு 2.5 லட்சம் கூடுதல் இறப்புகளுக்கு காலநிலை மாற்றம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.
நீர்-வானிலை தொடர்பான பேரழிவுகளான (hydro-meteorological disasters) சூறாவளிகள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை அதீதமாக ஏற்படும் போது, பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளை கீழே உள்ள அட்டவணை விளக்கமாகக் காட்டுகிறது.
இதில் சூறாவளிகள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய பேரழிவுகளின் போது, பிரசவத்திற்கு முந்தைய பரமாரிப்பிலிருந்து பெண்கள் அதிகமாக விலகிகொள்கின்றனர் என்பதை தரவுகள் காட்டுகின்றன. மேலும் சூறாவளி ஏற்படும் சமயங்களில், குழந்தை திருமணங்கள் மற்றும் கருசிதைவு ஆகியவை அதிகளவில் நடப்பதாகவும் ஆய்வு கூறுகிறது,
இதே போன்று வறட்சி ஏற்படும் சமயங்களில், நகர்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களிலேயே பெண்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை கீழே உள்ள அட்டவணை தெளிவாக விளக்குகின்றன.
மேலும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களின் காரணமாக பெண்களுக்கு ஆரம்பகால மாதவிடாய், கருவுறாமை, கருச்சிதைவுகள், கர்ப்பகால நீரிழிவு, குழந்தை பிறப்பின் போது குறைவான எடை, பிறக்கும் போதே குழந்தை இறத்தல் மற்றும் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தம் போன்ற பல விளைவுகள் ஏற்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.
15.8 கோடி பெண்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவார்கள்!
யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையை ஆய்வு செய்து பார்க்கையில், 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை பேரிடர்களால் 15.8 கோடி பெண்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவார்கள் மற்றும் 23.6 கோடி பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மையை (Food Insecurity) எதிர்கொள்வார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
“BMC Pregnancy and Childbirth” வெளியிட்டுள்ள ஆய்வில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்தியாவில் 2015 முதல் 2021-க்குள் கருவிலேயே குழந்தை உயிரிழக்கும் விகிதம் 28.6% அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, “Nature” ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், வெள்ள பாதிப்புகள் காரணமாக 1,07,888 பெண்கள் கருக்கலைப்புக்கு ஆளானதாகவும் கூறுகிறது.
எனவே அனைத்துத் தரவுகளையும் ஆய்வு செய்து பார்க்கையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை என்பதையும், சமூகக் கட்டமைப்பில் இருக்கும் பாலின சமத்துவமின்மையின் காரணமாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை ஆண்களைவிட பெண்களே அதிகம் அனுபவிக்கின்றனர் என்பதும் உறுதியாகிறது!