YouTurn

நகர்ப்புற நடுத்தர வர்க்கம் ஏன் செலவுகளைக் குறைத்துக்கொள்கிறது?

உயர் அதிகாரிகள், சாதாரண ஊழியர்களைவிட ’ஆயிரம் மடங்கு' அதிக ஊதியம் வாங்குகிறார்கள்.

நகர்ப்புற நடுத்தர வர்க்கம் ஏன் செலவுகளைக் குறைத்துக்கொள்கிறது?

நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலிவர் மற்றும் மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்களின் 2025ஆம் நிதியாண்டின் (FY25)  இரண்டாவது காலாண்டிற்கான தரவுகள், நகர்ப்புற மக்களின் நுகர்வு குறைந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. மேற்கூறிய நிறுவனங்கள் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்களை முன்னுணரும் ’Bellwether companies’  என்ற சொல்லப்படுபவையாகும். இந்த நிறுவனங்களால் பொருளியலில் உணரப்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் வருங்காலத்தில் பாதிக்கும் என்பதும் இதன் பொருளாகும்.


இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள மாதாந்திர பொருளாதார அறிக்கையின்படி, சோப்பு, ஷாம்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை வளர்ச்சி குறைந்திருக்கிறது. முதல் காலாண்டில் 10.1 சதவீதமாக இருந்த அதன் விற்பனை வளர்ச்சி அடுத்த காலாண்டில் 2.8 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த விற்பனை வளர்ச்சி குறைவு என்பது எண்ணிக்கைத் தொகுதிக் கணக்கில் (volume) அளவிடப்பட்டுள்ளது. ஏனெனில், விலைவாசி உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே போவதால், விற்பனை குறைவை பணத்தைக் கொண்டு துல்லியமாக அளவிடமுடியாது. 



உதாரணமாக, சென்ற ஆண்டில் 10 ரூபாய் மதிப்புள்ள குளியல் சோப்புகள் 100 விற்பனையாகியிருந்தால்,  ரூ.1000 வருமானம் வந்திருக்கும். அதே குளியல் சோப்பின் விலை தற்போது ரூ.15 ஆக உயர்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது வெறும் 70 சோப்புகள் விற்பனையாகி இருந்தாலும் வருமானம் ரூ.1000க்கு மேல் சென்றுவிடும். இதனால், விற்பனையான சோப்புகளின் எண்ணிக்கையைப் பண வருமானத்தின் கணக்கில் சரியாக அளவிடமுடியாது. 


நுகர்வுப் பொருட்களின் விற்பனை எண்ணிக்கை குறைந்துள்ளது, மக்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்வதைக் காட்டுகிறது. இதனால், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் லாபங்கள் இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் லாபம் 17% வரை குறைந்துள்ளது. நுகர்ப்பொருட்களுகான ‘கிராக்கி (Demand)’ குறைந்திருப்பதற்குக் காரணம் நகர்ப்புற நடுத்தர வர்க்கம் தங்களது நுகர்வைக் குறைத்துக்கொண்டதுதான்.



நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வருமான வளர்ச்சி (Income Growth) தொடர்ந்து குறைந்து வருகிறது. 2023 நிதியாண்டில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை நிறுவனங்களில்  10.8 சதவீதமாக இருந்த ஊதிய வளர்ச்சி, தற்போது 2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாகத் தகவல் தொழில் நுட்பத்துறையில் (IT) புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வது குறைந்துள்ளது, ஊதிய உயர்வு சரியாக வழங்குவதில்லை, மேலும் ஆட்குறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், பணவீக்கமும் (Inflation) அதிகமாக இருப்பதால், நடுத்தர வர்க்கம் அத்தியாவசிய தேவைகள் போகப் பிற விஷயங்களுக்குச் செலவு செய்யத் தயங்குகின்றனர். 


நடுத்தர வர்க்கத்திடம் பணப்புழக்கம் இல்லாத நிலை இருக்கும் அதே வேளையில், முன்னணி நிறுவனங்களின் வருமான வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. GST வரி வருமானம், இரண்டாவது பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. நுகர்வுப் பொருட்களைவிட ஆடம்பர பொருட்களுக்கான கிராக்கி அதிகமாக உள்ளது. இந்த எதிரெதிர் நிலைகளுக்குக் காரணம் என்ன?


’Mint’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கான சராசரி ஊதியம் (Median Remuneration) கடந்த ஐந்தாண்டுகள் மட்டும் ரூ.3.8 கோடியிலிருந்து ரூ.5.7 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், சாதாரண ஊழியர்களைவிட ஆயிரம் மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறார்கள். இதனால், ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் ஊதியம் பெரும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2023 நிதியாண்டில் 26 சதவீதமாக இருந்த ஒரு கோடிக்கு மேல் ஊதியம் பெரும் அதிகாரிகளின் எண்ணிக்கை, 2024 நிதியாண்டில் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இந்தியளவில் Poonawalla Fincorp நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்(MD) அபய் பூதாடா என்பவர்தான் அதிக ஊதிய பெரும் உயரதிகாரிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். சன் குழுமத்தை சேர்ந்த கலாநிதி மாறன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 



இது, உயர் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியத்தில் உள்ள பெரும் இடைவெளியைக் காட்டுகிறது. இதனால் பலமடங்கு அதிக ஊதிய பெரும் அதிகாரிகள் Mercedes-Benz, BMW, Apple போன்ற நிறுவனங்களின் அதிக விலையுள்ள ஆடம்பரப் பொருட்களை வாங்குகிறார்கள். அதேவேளையில் ஊதிய வளர்ச்சி இல்லாததால், நகர்ப்புற நடுத்தர வர்க்கம் தங்களது செலவைக் குறைத்துக்கொள்கின்றனர். 


இப்படி நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்யும் தனியார் நுகர்வு வெகுவாக குறைந்தால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். நுகர்வுப் பொருட்களுக்கான கிராக்கி அதிகமாகாத வரை தனியார் நிறுவனங்கள் புதிய தொழில்களில் முதலீடுகள் செய்யமாட்டார்கள். இதனால் பொருளாதாரத்தை முடுக்கிவிட வேண்டிய மொத்தப் பொறுப்பும் அரசின் முதலீடுகளைச் சார்ந்தே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், சில மாநில அரசுகள் மக்களுக்கு நேரடியான பண ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால், மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் உத்தி இந்த மந்தமான நுகர்வு என்னும் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்காது. மேலும், நுகர்வுக்கான கிராக்கி இப்படி மந்தமாகவே வெகுகாலம் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை