இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன? ஒரு அலசல்!
விவசாயத் துறை வளர்ச்சிக்கும் மற்ற துறைகளின் வளர்ச்சி விகிதங்களுக்கும் இடையிலான ஒப்பீட்டளவிலான வேறுபாடு தான் பணவீக்கம் குறைந்துள்ளதற்கான காரணம். மாறாக, ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கை (Monetary policy) அல்ல.
”உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும்” என்று இந்திய அரசாங்கத்தால் சொல்லப்படுகிறது. இவ்வாறு சொல்லப்பட்டாலும், யதார்த்தமாக இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் இரண்டு பிரச்சினைகள் பற்றி நாம் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று, பணவீக்கம் (Inflation) மற்றொன்று வேலையின்மை (unemployment).

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த 2025 ஏப்ரம் மாதம் 3.16 சதவீதமாக குறைந்திருந்தது. உணவுப் பொருட்களின் விலை குறைந்து வருவதால் இவ்வாறு பணவீக்கத்தின் அளவு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயத்துள்ள இலக்கான 4 சதவீதத்தை விட தொடர்ந்து மூன்றாவது மாதமாக பணவீக்கம் குறைவாக உள்ளது. இது பொருளாதாரத்தில் சாதகமான விஷயம் என்றாலும், ஏப்ரல் மாதத்தில் 5.1% ஆக இருந்த வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 5.8% ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ’Periodic Labour Force Survey’ எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு அதிகரித்து வரும் வேலையின்மையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒரு பொருளாதாரத்தின் நிலையை மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல. மேலும் இந்தியாவில் ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ந்து வருவதாக அரசாங்கம் தொடர்ந்து சொல்லிவந்தாலும், 2024-25 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் 2023-24 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகதம் 9.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதோடு வேலையின்மை அதிகரித்து வருவது ஒத்துப்போவதாக இருக்கிறது. அதாவது, பொருளாதார வளர்ச்சி குறைந்ததால், புதிய தொழில்கள் மூலமாக வேலை வாய்ப்புகள் பெருகுவதும் குறைந்துள்ளது. இதனால், இது வேலையின்மை அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி விகிதக் குறைவு என்பது பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலும் நடந்துள்ளது. அரசு துறை நிறுவனங்களைத் தவிர அனைத்து துறைகளின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. ஒரே விதிவிலக்கு விவசாயத்துறை மட்டுமே. விவசாயத்துறை வேகமாக வளர்ந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட, ஒப்பீட்டளவிலான விவசாயத்துறையின் வளர்ச்சியும் மற்ற துறைகளில் வளர்ச்சி குறைந்ததாக இருப்பதும் இந்தியாவில் பணவீக்கம் குறைந்துள்ளதை விளக்குவதாக இருக்கிறது. அதாவது, விவசாயத்துறையின் வேகமான வளர்ச்சி என்பது உணவுப் பொருட்களின் விலையை உயராமல் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அதேவேளையில், மற்ற துறைகளின் வளர்ச்சி மந்தமாக இருப்பதால், அந்தத் துறைகளில் வேலை செய்பவர்களின் நுகர்வுத் தேவை (Consumer Demand) குறைவாக இருக்கிறது. இதனால், வழங்கல் மற்றும் தேவையின் இடைவெளி (supply-demand gap) குறைந்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிட்டதட்ட 11 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், 2025 மே மாதம் வெறும் 1 சதவீதம் மட்டுமே உள்ளது. இது மேற்சொன்ன விவசாயத் துறை வளர்ச்சிக்கும் மற்ற துறைகளின் வளர்ச்சி விகிதங்களுக்கும் இடையிலான ஒப்பீட்டளவிலான வேறுபாடு தான் பணவீக்கம் குறைந்துள்ளதற்கான காரணம் என்பது உறுதிபடுத்துகிறது. மாறாக, ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கை (Monetary policy) தான் பணவீக்கம் குறைந்ததற்கான காரணம் என்று சொல்லப்படுவது உண்மை அல்ல.

“Inflation in India: Dynamics, distributional impact and policy implication” என்ற ஆய்வுக்கட்டுரையில், ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையின் அடிபடையிலான வட்டி விகிதங்கள் தான் இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது என்று சொல்வதற்கான உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை என்று பேரசிரியர்கள் புலப்ரே பாலகிருஷ்ணன், பரமேஸ்வரன் நிரூபித்துள்ளார்கள்.
பணவீக்கத்தை கட்டுப்படுவதில் இந்திய ரிசர்வ் வங்கி கையாளும் முறை என்பது, பொருட்களுக்கான தேவை அதிகமாகும் போது வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் நுகர்வுக்கான தேவையை சுறுக்குவதும் கட்டுப்படுத்துவதும் தான். ஆனால், தற்போது இந்தியாவில் பணவீக்கம் குறைந்துள்ளதற்கு ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி விகிதங்களை உயர்த்தும் அணுகுமுறை காரணமல்ல. மாறாக, பொருளாதார வளர்ச்சி விகிதம் விவசாயத் துறையைத் தவிர மற்ற துறைகளில் குறைந்துள்ளதும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள வேலையின்மையும் தான் பணவீக்கம் குறைந்துள்ளதற்கான காரணமாகும்.